Monday, December 14, 2020

மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள்: பேபி டயாபர் / பேம்பர்ஸ் உபயோகம்

மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள்  
பேபி டயாபர் /  பேம்பர்ஸ் உபயோகம்
  

நம் முன்னோர்கள் கடைப்பிடிததவற்றில் இன்று மாற்றத்துடன்  புதிய அவதாரமெடுத்திருக்கும் நாகரீக உலகில் தற்பொழுது அதிகம் விற்பனையாகும் ஒரு பொருள் பேபி டயாபர்.

சென்ற 10 வருடங்களுக்குள் இதன் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

டயபர்கள், குழந்தைகளுக்கென பிரத்யேக சோப்பு என விதவிதமாக குழந்தை பராமரிப்பு பொருட்கள் மிகப் பெரிய சந்தையாக வளர்ந்து நிற்கின்றனஅதிலும் இந்தியா போன்ற நாட்டில் குழந்தைகள் பலவற்றில் ஒன்றுதான் பேபி டயாபர் / பேம்பர்ஸ் உபயோகம்.

இன்றைய பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் குழந்தை பராமரிப்பு பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

குழந்தை பராமரிப்பு பொருட்கள் இன்றைய சந்தை  எந்த நிலையில் இருக்கிறதென என்பது தெரியுமா?இந்தியாவில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயபர் சந்தையின் மதிப்பு ரூ.1200 கோடி

> டயபர் சந்தை மட்டும் ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

> 2018-ம் ஆண்டில் இந்தியாவில் 4.7 பில்லியன் அளவிற்கு டயபர் விற்பனை ஆகியிருக்கிறது. மேலும் 2024 க்குள் 7.4 பில்லியன் அளவைத் தொட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனி இந்த டயாபர்களின் உபயோகத்தால் ஏற்படும் சாதக, பாதகங்களை அலசுவோம்.

முதலில் குழந்தைகளுக்கு இடம், நேரம், காலம் எதுவும் தெரியாது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். சிறுநீர் மற்றும் மலம் கழிப்பது என்பது அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவை. அதனால் அவை வரும்போது இருந்த இடத்திலேயே அப்படியே போய் விடுவார்கள். இது இயல்பானது.

இதற்காக பெரியோர்கள் வீட்டில் இருக்கும் பழைய துணிகளைக் கொண்டு கைக்குட்டை போன்று வெட்டி அதன் மூலைகளை கையால் தைத்து பீத்துணியை செய்து கொள்வார்கள்.

அதைக் குழந்தைகளின் இடுப்பில் கட்டி விடுவார்கள். குழந்தைகள் அழுவதைக் கொண்டே மல, ஜலம் கழித்ததை உணர்ந்து கட்டியிருக்கும் துணியை மாற்றி விடுவார்கள். அவிழ்த்த துணியை துவைத்து மீண்டும் உபயோகித்துக் கொள்வார்கள்.

இப்படித்தான் போன தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். நாமும் அப்படித்தான் வளர்ந்தோம்.

ஆனால் இன்று எல்லா வீடுகளிலும் குழந்தைகளுக்கு பேபி டயாபர் / பேம்பர்ஸ் உபயோகிக்கிறோம்.

இதை பழைய பீத்துணியுடன் ஒப்பிடுகையில் உபயோகிக்க மிக எளிதானது, மலிவானது. இடம், துணி, தொட்டில் இவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது.

இதனால் சுற்றுப்புற சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவை மேம்படுகிறது. கசக்கிக் காய வைக்க வேலை செய்யத் தேவையில்லை. இந்த வேலைக்கு  யார் தயவும் தேவையில்லை.

எல்லாவற்றையும் விட நடு இரவில் தூக்கத்தில் எழுந்து ஈரத் துணியை மாற்றத் தேவையில்லை இவற்றிற்காகத்தான்  டயாபர்களை தாய்மார்கள் அதிகம் குழந்தைகளுக்கு  அணிவிக்கிறார்கள்.

டயாபர்களின் உபயோகத்திற்கான காரணங்கள் பெற்றோர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் அணியும் குழந்தைகளுக்கு சரியானதா? என்பதை யோசிக்க வேண்டும்.

அன்றைக்கு பெற்றோர்களும், மற்றவர்களும் குழந்தைகளின் சிறுநீரையும், மலத்தையும் பன்னீரும், சந்தனமுமாகச் சொல்வார்கள். அப்படியே கருதினார்கள். தங்கள் மீது குழந்தைகள் இவற்றை இருந்து விட்டால் ஒருபோதும் அறுவருப்பு கொண்டதில்லை. அவர்கள் அதிகம் படிக்காதவர்கள். ஆனால் வாழ்க்கையைப் படித்தவர்கள். அவர்களிடம் வளர்ந்த நாம் கொடுத்து வைத்தவர்கள்

 அவர்கள் நம்மிடம் காட்டிய கனிவையும், பரிவையும் நாம் நம் குழந்தைகளிடம்  காட்டுகிறோமோ என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்..

அன்றைக்குக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. நம்மோடு தாத்தா, பாட்டி, இன்ன பிற சொந்தங்கள் நம் வளர்ப்போடு கலந்திருந்தார்கள். பிள்ளை பெற்ற பெண் ஈரத்தில் புழங்கக் கூடாது என்று எல்லா வேலைகளையும் அந்த நேரங்களில் மற்றவர்கள் பார்த்துக் கொண்டார்கள். முக்கிய்மாக பீத்துணியைக் கசக்கிக் காய வைக்கும் வேலையை தயக்கமின்றி செய்தார்கள்.

இன்றைக்குக் கூட்டுக் குடும்ப முறை உடைந்து போய் தனிக்குடித்தனம் நடத்தும்போது எவ்வளவு காசு கொடுத்தாலும் பீத்துணி கசக்க அவ்வளவு சீக்கிரம் ஆள் கிடைப்பதில்லை. அதனால் டயாபர் உபயோகித்து விட்டு குப்பையில் தூக்கி எறிந்து விடத்தான் முடிகிறது.


டயாபரை அணிவித்து விட்டால் பக்கத்தில் படுத்திருக்கும் பாப்பாவின் ஈரத்தால் படுக்கை நனையாது. பல ஆயிரம் கொடுத்து வாங்கி இருக்கும் படுக்கை பாதுகாப்பாக இருக்கும். தைரியமாக பக்கத்தில் படுக்க வைத்துக் கொள்ளலாம். அடைத்து வைத்துக் கொள்ளும் அறைக்குள்ளும் மூத்திர நாற்றம் அடிக்காது.

படுக்கைக்கும், படுக்கையறைக்கும் இது ஓகே.  ஆனால் பாப்பாவின் ஆரோக்கியம்  ?

அன்றைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடக்கவில்லை. உறவுகளால் இயங்கியது.

ஆனால் இன்றைக்கு கணவனும், மனைவியும் வேலைக்குப் போக வேண்டியது காலத்தின்  கட்டாயம்..

அன்று நள்ளிரவில் பாப்பா அவ்வப்போது விழித்தாலும் தூக்கம் கெட்டு பணிவிடை செய்து படுப்பார்கள். சற்று தாமதமாகக் கூட எழலாம் என்கிற நிலை.

ஆனால் இன்று இரவில் தூக்கம் கெட்டாலும் காலை சரியான நேரத்தில் எழுந்து சமையல் இன்ன பிற வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து விட்டு சரியான நேரத்தில் வேலைக்குக் கிளம்பியாக வேண்டும். பகல் முழுவதும் பணிச்சுமை. இரவிலும் ஓய்வில்லை என்றால் அது பெருங்கொடுமை. அதைத் தவிர்க்கவே டயாபர்கள்.

ஆனால் உங்கள் குழந்தையின் சூழ்நிலை, பிரச்னை உங்களுக்குத் தெரியுமா?

பெரியவர்களான நாமே இரவு நேரத்தில் இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்துத் தளர்வான லுங்கி, நைட்டி முதலான ஆடைகளை அணிகிறோம். பலர் பகலில் கூட வீட்டில் இருக்கும்போது காற்றோட்டமான லுங்கி போன்றவற்றைத்தானே அணிகிறார்கள். ஆனால் இந்தப் பச்சிளம் குழந்தைகளுக்குக், காற்றோட்டத்துக்கு வாய்ப்பே இல்லாத இந்த டயாபர்களை  பகலிலும், இரவிலும் 24 மணி நேரமும் அணிவிப்பது எந்த வகையில் சரியான செயலாக இருக்க முடியும்?

அதிலும் பயணங்களில் என்றால் சொல்லவே வேண்டாம், பாவம் அந்தக் குழந்தைகள்,

நாள் முழுதும் டயாபர்களாலேயே சுற்றப்பட்டு இருக்கின்றன. அடிக்கடி ஆடையை மாற்ற வேண்டாம் எனும் வசதிக்காக இதைப் பயன்படுத்துகிறார்கள்

‘’one pamper = one dry night.’ என்பது டயாபர்களின் விளம்பர வாசகம்  அதாவது இந்த ஒரு டயாபரைக் குழந்தைக்கு அணிவித்து விட்டால், இரவு முழுதும் குழந்தையின் சிறுநீரானது இதன் பஞ்சுப் பகுதிகளால் உறிஞ்சப்பட்டு, அதில் உள்ள வேதிப் பொருட்களால் ஜெல் (magic gel) நிலைக்கு மாற்றப்படுகிறது. இதனால் குழந்தை ஈர உணர்வால் அழாமல் இரவு முழுதும் தூங்கும்.

போதுமான காற்றோட்டம் இல்லாததாலும், சிறுநீரை ஜெல்லாக மாற்றும் வேதிப் பொருட்களின் தாக்கத்தாலும் அலர்ஜியாகிக் குழந்தைகளின் பிறப்புறுப்பில் அரிப்பு புண்கள் போன்றவை தோன்றுகின்றன.

நாம் அதற்கும் ஒரு ஆயிண்ட்மென்ட்டைப் பூசிவிட்டு அடுத்த டயாபரை மாட்டி விடுகின்றோம்

சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் என்பதை இந்தத் தலைமுறைதான் தலைமுறைதான் ஏதோ கவனத்தில் கொண்டு முழு மூச்சுடன் செயல்படுவதாகக் கருதுவோர்தான் இன்னொரு கருத்தையும் சொல்கிறார்கள்.

சிறுநீரிலும், மலத்திலும் பல்வேறு கிருமிகள், நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவற்றால் நோய்த் தொற்றுகள் ஏற்பட்டு நோய்கள் பரவுகின்றன’.  என்று உரக்கச் சொல்கிறார்கள். சரி இந்தக் கருத்துப்படி பார்த்தால்கிருமிகள் நிறைந்த மூத்திரத்தோடும், மலத்தோடும் மணிக்கணக்கில் குழந்தைகளை இருக்க விடலாமா? இதனால் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுமே ?

இறுக்கமான டயப்பரை அணிவதால், குழந்தைகளின் உடலுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்காது. குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். மேலும், சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படவும் இதுவே காரணம். இந்த எரிச்சலின் காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கும்.

டயப்பரில் சிறுநீரை உறிஞ்ச, சோடியம் பாலி அக்ரிலேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. கூடவே, நறுமணத்துக்காகவும் சில வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். கால் இடுக்குகளில் அலர்ஜி ஏற்படுவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

கிருமித்தொற்றைத் தடுக்க, சில டயப்பர்களில், ஆன்டிசெப்டிக் பயன்படுத்தப்படுகிறது. இதுவும், குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம்பார்த்துவிடும்.

கூடவே தொடர் சளித்தொல்லை, இருமல், போன்றவைகளும் தொந்தரவு தரும்.

24 மணி நேரமும், டயப்பரிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளால், ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னரும், சிறுநீர் வருவதை பெற்றோருக்கு உணர்த்த தெரியாது. டயப்பர் போட்டிருப்பதாக எண்ணி, இருந்த இடத்திலேயே சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை அடக்குவது என்கிற இரண்டு தவறுகளைச் செய்யத் தொடங்குவார்கள். படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.” இதைச் சொல்வது மருத்துவர்கள்தான்.

பெற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தைவிட நிம்மதியான தூக்கமும்சௌகரியமும்தான் நமக்கு முக்கியம் என்கிற அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வீடு நிறைய பிள்ளைகள் பெற்று வாழ்ந்தவர்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்தார்கள். ஒன்றே ஒன்றைப் பெற்று வைத்திருக்கிற நாம் நமக்காகவே வாழ்கிறோம். எல்லாம் சுயநலம்தான்

ஆக எவ்வளவோ சௌகரியங்கள் டயாபர்களால் நமக்கு இருந்தாலும் நம் குழந்தைகளுக்கு அசௌகரியமானது, ஆபத்தானது என்பதைக் கருத்தில் கொண்டு இவற்றின் உபயோகத்தை முடிந்த அளவு தவிர்ப்பதே நல்லது.

ஆனால் தங்களின் சௌகரியமே முக்கியம் என்பதை விடாப்பிடியாகப் பிடித்து நிற்கும் பெற்றோரிடம் நாம் கோரும் ஒரே ஒரு கோரிக்கை இதுதான். ‘ ஒரே ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது பகல் முழுவதும் உங்கள் அளவிற்கான டயாபர் அணிந்து வாழ்ந்து பாருங்கள். சிறுநீர் வந்தாலும், மலம் வந்தாலும் அதைக் கழற்றாமலே, அதாவது அந்த டயாபரிலேயே போய் விட்டு அதன் பிறகும் நீண்ட நேரம் அதைக் கழற்றாமல் அதனுடனேயே வாழ்ந்து பாருங்கள்.

இதைப் படிக்கும்போதே அருவறுப்படைந்து முகம் சுழிக்கத் தோன்றுகிறதா? 

நம் காலணிகளில் மலக்கழிவுகள் பட்டு விட்டாலே அருவறுப்படைகிறோமே!

ஆனால் இந்த அசிங்கத்தில்தான் உங்கள் குழந்தைகள் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக வாழுங்கள்.

உங்களின் சந்ததி இனி ஆரோக்கியமாக வளரட்டும்

 

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்
                                                             

No comments:

Post a Comment