ஆன்மீகக் கல்வியின் அவசியம்
நம் பிள்ளைகளுக்கு
ஆங்கிலம் பயிற்றுவிக்கிறாம்.
அறிவியல் பயிற்றுவிக்கிறாம்.
ஆனால் நல்ல ஆன்மீகம் பயிற்றுவிக்கிறோமா ?
ஆங்கிலமும், அறிவியலும் புறவுலகுக்கு
ஆனால் ஆன்மீகம் அகவுடலுக்கு
பொருளீட்ட உலகக் கல்வி
பொருள் பொதிந்து வாழ சமயக் கல்வி
வருமானத்தைக் காட்டி கொடுக்க உலகக் கல்வி
தன்மானத்தை கட்டிக் காக்க சமயக் கல்வி
உலகக் கல்வி பொருளாதார அடிப்படையில் அமைந்தது.
பிள்ளைகள் பெற்றோரையும் பொருளாதார அடிப்படையிலேயே நோக்குவார்கள்.
நல்ல சமயக் கல்வியால் அவரவர் தம் சமயம் பற்றி நன்கு அறிவோர், சமயங்கள் கடந்து பிற சமய துவேஷம் கொள்ளார்.
தன் முதுகே பார்க்காதவர் பிறர் முதுகின் அழுக்கை நோக்கார்.
தன் மத ஈர்ப்பு
பிற மத கார்ப்பு என்பதாகக் கூடாது.
மத நம்பிக்கை வேறு
மதவெறி வேறு என்பதை சொல்லிக் கொடுக்கும் சமயக் கல்வி தேவை.
இது பண்டைய காலத்தில் குருகுலம் போன்றவற்றில் கற்பிக்கப்பட்டன.
முஸ்லீம்களுக்கு அரபி மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டன.
ஆனால் இன்று எல்லாம் பொருளாதாரம் என்கிற இந்தக் காலத்தில்
இது பள்ளிக்கூடங்களில் கிடைக்காது
கோவிலுக்குச் சென்று,
பள்ளிவாசலுக்குச் சென்று,
மாதா கோவிலுக்குச் சென்று
வழிபாடு செய்வது மட்டுமல்ல சமயக் கல்வி .
வேதங்கள் பயில்வதும்,
மந்திரங்கள் ஓதுவதும் மட்டுமல்ல சமயக் கல்வி .
சகல நேரத்திலும் எப்படி வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பதே சமயக் கல்வி .
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை
எதை, எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பெரியோர்களுக்கு மரியாதை,
வறியோர்களுக்கு கருணை ,
சிறியோர்களிடம் பெருந்தன்மை என சகலமும் கற்பிக்கப்பட வேண்டும்.
உண்பது, உழைப்பது, உறங்குவது எல்லாம் சொல்லித் தரப்பட வேண்டும்
ஆம். இவை பள்ளிக்கூடங்களில் கிடைக்காது
பள்ளிக்கு வெளியே கிடைக்கும்.
அவரவர் வீட்டிலேயே கிடைக்கும்.
இதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான்.
பெற்றோர்கள் சொன்னால்
பிள்ளைகள் சொன்னால் கேட்க மாட்டார்கள்தான்
அட்வைஸ் பண்ணினாலும் அவர்களுக்குப் பிடிக்காது.
காலமும், அவர்கள் வயதும் அப்படி.
அதனால் சொல்ல வேண்டாம்.
ஆனால் அவர்கள் முன் பெற்றோர்கள் செய்து காட்ட வேண்டும்.
வாழ்ந்து காட்ட வேண்டும்
பெற்றோர்கள் செய்வதே அவர்களுக்கு பாடம்
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு சிறந்த ஆசிரியர்கள்.
பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் வாழ வேண்டும்
பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு ரியல் ஹீரோக்கள்.
இதைப் புரிய வையுங்கள்.
பாலகுமாரன் சொல்வார்
"இந்த வயசுல அட்வைசும் புடிக்காது. அட்வைஸ் பண்றவாளையும் புடிக்காது. ஆனா நான் உனக்கு இப்ப சொல்றது உன் மேல இருக்கற அக்கறை"
இதையும் புரிய வையுங்கள்.
இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இதை புரிந்து கொள்வார்கள்.
பெற்றோர்கள் வாழ்க்கையே பிள்ளைகளுக்குப் பாடம்.
அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை பிள்ளைகள் முன் பெற்றோர்கள் செய்யும் அனைத்துமே அவர்களுக்கு பாடங்கள்.
இது 9 AM to 4 PM நேர வகுப்புகளில் கிடைக்காது.
நல்ல விஷயங்களைப் பிள்ளைகளிடம் சொல்லலாம், ஏவலாம்.
சொல்லியதை, ஏவியதை அனைத்தையும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பு வேண்டாம்.
ஆனால் தினம் தினம் பெற்றோர்கள் செய்வதைப் பார்த்தால்
ஒரு நாள் தானாக செய்வார்கள்.
குட்டிக் குழந்தைப் பருவத்தில் பழக்கம் எளிதில் ஒட்டிக் கொள்ளும்.
வளர்ந்த பிள்ளைகளுக்கு இது தாமதமாகும்.
ரால்ப் வால்டர் சொல்கிறார் :
"திரும்பத் திரும்ப செய்யப்படும் செயல் பழக்கமாய் மாறுகிறது.
பழக்க வழக்கங்கள் குணநலன்களாக (Character) அமைகின்றன. குணநலன்களே வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன."
தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று பெற்றோர்களுக்கு இப்படி சொல்லும்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே "
அதிகம் சமயச் சொற்பொழ்வுகள் கேட்டு வளர்ந்தது.
அதிகம் புத்தக வாசிப்பில் வளர்ந்தது.
இன்றைய தலைமுறைக்கு இந்த இரண்டுக்குமே கொடுப்பினை இல்லை.
தேடல் என்பதற்கு இவர்களின் அர்த்தமே வேறு
எல்லாவற்றையும் Google-ல் தேடும் தலைமுறை இது.
Google நல்லதையும் தேடிக் கொடுக்கும்
ஆனால் எது நல்லது? என்பது அவரவர்க்கு வேறுபடும்.
Google புறவுலகிற்கு நல்ல Search engine.
வருமானம் ஈட்ட, வசதியாய் வாழ வழி சொல்லும்
நல்ல Search engine Google.
ஆனால் அகத்திற்கு, தனக்குள் தன்னை, பிறரை அறிய முயற்சிக்கும் தேடலுக்கு நல்ல ஆன்மீகம்தான் சிறந்த Search engine.
இது என் கருத்து. மற்றவர்களுக்கு வேறுபடலாம்.
ஆன்மீகக் கல்வி -
அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொடுக்கும்
ஆசைகளை குறைக்கக் கற்றுக் கொடுக்கும்
ஆன்மாவை அமைதிப்படுத்தும்.
நம்பிக்கை வளர்க்கும்.
'எல்லாம் அவன் செயல்' என்பது துறவு வார்த்தை அல்ல
ஆணவம், அகங்காரம், தற்பெருமை தவிர்த்து தன்னடக்கம் சொல்லும் வார்த்தை.
"போனால் போகட்டும் போடா" என்பது தோற்றுப் போனவன் விரக்தியில் பாடுவதல்ல.
'நடந்தது நடந்து விட்டது, அடுத்து நடக்கப் போவதைப் பார்ப்போம்' என்று தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்.
ஆன்மீகமும் இதையேதான் கற்றுக் கொடுக்கும்.
இவை பெற்றோர் விருப்பம், பெற்றோர் கொள்கைகள்.
இவற்றை பிள்ளைகள் மேல் திணிக்கலாமா?
அவர்கள் வளர்ந்த பின் அவர்களே தெரிந்து கொள்வார்களே !
அவர்களுக்கென்றும் தனிப்பட்ட விருப்பம், கொள்கை இருக்கலாமே !
நாம் எதற்கு அவர்களிடம் 'கருத்துத் திணிப்பு, விருப்பத் திணிப்பு' செய்ய வேண்டும்? எனத் தோன்றலாம்
வயதும், வயதுக்கேற்ற பக்குவமும் வராத காலத்தில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோர் தம் பொறுப்பு, கடமை.
உடலுக்கு உணவும், உடையும் கொடுக்க வேண்டிய கடமை போல் உள்ளத்திற்கு வேண்டியதையும் கொடுக்க வேண்டியதும் கடமை தானே.
பெற்றோர்கள் செய்வது ஒரு வழி காட்டல். அவ்வளவுதான்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ் பழமொழி.
இதை மனதில் கொண்டு சிறு வயது முதலே நல்ல ஆன்மீகத்தை, நல்லொழுக்கங்களை,முறையாக வாழும் வழிகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
29.11.2020


No comments:
Post a Comment