Saturday, November 21, 2020

மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள் : எல்லாம் “இதம்” மயம்

 மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள் 

எல்லாம் “இதம்” மயம்

“முன்னோரெல்லாம் மூடர்களில்லை, நமக்குண்டு பண்பாடு” என்ற ஒரு வரி ‘பட்டிக்காடா? பட்டணமா?’  திரைப்படப் பாட்டில் வரும். மறந்திருக்க மாட்டீர்கள்.  இது சரியா?

நம் முன்னோர்கள் சடங்கு, சம்பிரதாயம், பழக்க வழக்கம் என்று  பல விஷயங்களை நம் மண்ணுக்கும், காலச் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் செய்து வந்திருக்கிறார்கள்.

இன்று நம் மண்ணும் மாறி விட்டது. காலச் சூழ்நிலைகளும் மாறி விட்டன. நம் பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விட்டது. இவை காலத்தின் நிர்ப்பந்தங்கள்.

தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியுமா? பாட்டி வைத்திருந்த தங்க ஊசி என்பதற்காக எடுத்துக் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா? என்று நம்நாட்டில் ஒரு சொலவடை உண்டு.

உண்மைதான் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை. மாற்றம் ஒன்றே மாறாதது – இதுவே உண்மையானது..

மாற்றங்கள் வளர்ச்சியாய் இருக்க வேண்டும். நல்லதாய் இருக்க வேண்டும்.

அழிவைத் தரக் கூடாது. கெடுதல் செய்யக் கூடாது..

இதுவே மாற்றங்கள் குறித்த மனித குலம் அனைத்திற்குமான நோக்கம்.

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் நம் வீடுகளில் நாற்காலி என்பது அரிது. திண்ணை வைத்த வீடுகள்தான் இருக்கும்.

வீட்டுக்கு யாராவது வந்தால் உட்காருவதற்கு வெறும் தரை, முக்காலி, கோரைப்பாய், ஜமுக்காளம், மர நாற்காலி இப்படி பல இருக்கும். வந்திருப்பவர் மற்றும் வீட்டுக்காரர்களின் வசதிகள் பொறுத்து இவை மாறுபடும்.

படுப்பதற்கு பெரும்பாலும் கோரைப்பாய்கள். கயிற்றுக் கட்டில்கள்.

கட்டிலும், இலவம் பஞ்சு மெத்தையும் செல்வ வளத்தின் உச்சம்.

விடுகளின் தரை மண் தரையாக இருக்கும் அல்லது சிமெண்ட் தரையாக இருக்கும்.

செருப்புக்கள் அணிவது பல நேரம் இருக்காது. அப்படியே அணிந்தாலும் அவை முரட்டுத் தனமானவையாகவே இருக்கும்.

நடப்பதற்கு அஞ்சாதவர்கள். சுமைகளையும், குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சாதாரணமாக பல மைல்கள் நடந்தார்கள்.

சைக்கிள் உபயோகமும் அதிகம் இருந்தன.

கிணற்றிலிருந்து நீர் இறைத்தார்கள் அல்லது குடம் தூக்கி தொலைதூரம் சென்று அல்லது தெருக் குழாய்களிலிருந்து நீர் கொண்டு வந்தார்கள

துணிகள் துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, வீடு பெருக்குவது, போன்ற வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரவர்களே செய்து கொண்டனர்.

உழைத்ததன் அடையாளமாய் அவர்களின் கைகளில் காப்பு காய்த்திருக்கும்.

வயதானவர்களுக்குக் கூட பற்கள் வலுவானதாகவும், சொத்தைகளில்லாமலும் இருக்கும்.

அவர்கள் எலும்புகளும், உடலும் வலுவாயிருந்தன.

இன்று பெரும்பாலும் மெத்து, மெத்தென குஷன் ஷோபா வகைகள், வகை வகையான சேர்கள், தனிப்படுக்கை அறைகளில் அகன்ற ஃபோம் மெத்தைகள், தலையணைகள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

 


தரைகள் குளு குளுவென கண்ணாடி மாதிரியான மார்பிள், கிரானைட், டைல்ஸ் என விதமான தரைகள், வீட்டுக்குள்ளேயே நடப்பதற்கும் தனிச்செருப்பு,

மிக மிக மிருதுவான செருப்புக்களின் உபயோகம்.

கௌரவக் குறைச்சலாய் கருதப்படும் சைக்கிள் உபயோகம், தெரு முனையிலிருக்கும் கடைக்குப் போகக் கூட டூ வீலர்,

ஒரு சுவிட்சைப் போட்டால் போதும் மேல் நிலைத் தொட்டியில் தண்ணீர்,

எல்லா அறைகளிலும் திருப்பினால் தண்ணீர் கொட்டும் குழாய் வசதிகள்.

அன்றாட வீட்டு வேலைகளுக்கு எந்திரங்கள் அல்லது வேலையாட்கள்.

தவறிச் செய்கிற செயல்கள், வேலைகள் எல்லாவற்றிலும் இலகுத்தன்மை, மென்மை.

குனிந்து நிமிர்ந்து, ஓடியாடி  வேலை செய்வதை ஒதுக்கி விட்டு உடற்பயிற்சிக்காக என தனியாக  நேரம்  

கடினமான  உணவு வகைகள் (கரும்பு, எலும்பு போன்றவைகள்) ஒதுக்கப்பட்டு லேசானதும், மிருதுவானதுமான உணவு வகைகளுக்கே முன்னுரிமை.

இப்படி காலையில் எழுந்ததும் பல துலக்கும் சாஃப்ட் பிரஷ்,

குளிக்கும்போது வலிக்காது தேய்த்துக் கொள்ளும் மென்மையான நார், துடைத்துக் கொள்ளும் பூந்துவாலை டவல், 

அணிந்து கொள்கிற மென்மையான காட்டன் (?)உடைகள், 

மென்மையான செருப்புக்கள், நடக்க மறுத்து உபயோகிக்கும் வாகனங்கள்,

 உணவு வகைகள் ஷோபாக்கள் படுக்கைகள் என உபயோகிக்கும் அனைத்திலும்  மென்மை…. மென்மை….. மென்மை.            

எல்லாம் இதம் மயம்


எல்லாம் இலகு மயம்

மனிதனின் உடலெங்கும் 76,000 அக்கு புள்ளிகள் உள்ளதாகவும், அதில் 361 புள்ளிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும் சீன மருத்துவமான அக்குபங்சர் தெரிவிக்கிறது

இதில் பல புள்ளிகள் நம்மை அறியாமலேயே நம் தினசரி நடவடிக்கைகளினால் அழுத்தப்பட்டு தூண்டப்படும். இது நன்கு அழுத்தப்படும்போது மட்டுமே தூண்டப்படும். நம் முன்னோர்கள் இதில் எந்தப் புள்ளி எதைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் அறிந்தவர்களா என்பது தெரியாது  ஆனால்  தங்களது வழக்கமான, கடினமான செயல்பாடுகள் மூலம் தங்களைத் தாங்களே ஆரோக்கியப்படுத்திக் கொண்டார்கள்

‘கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, ஒரு வேளை கிடைத்தாலும் அது நிலைக்காது‘ என்பதைப் புரிந்து வாழ்ந்தார்கள்.

அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த மனநிலை படிப்படியாக மாறிப் போய் விட்டது. ‘நாம் பட்ட கஷ்டம் நம் பிள்ளைகளுக்கு வரக் கூடாது’ என்ற பெற்றோருடைய கரிசனம் இந்த மாற்றத்திற்கு ஒரு மிக முக்கிய காரணம். இதன் விளைவு, எதையும் எளிதாகப் பெற விரும்பும் அடுத்த தலைமுறையினரின் பேராசை  விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எப்படியாவது வசதியாக வாழ வேண்டும் எண்ணம் எல்லோரிடத்திலும் பரவி இருக்கிறது.

குறுக்கு வழிகள் தேடும் போக்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கூடுதல் கட்டணம் என்றாலும் பரவாயில்லை, பயணம் சௌகரியமாக இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு நம் அனைவரையும் இது கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இன்பமும், துன்பமும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளாத, எதையும் தாங்கும் இதயம் இல்லாத, தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தலைமுறை இப்பொழுது வளர்ந்து கொண்டே இருக்கிறது

நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இன்றைக்குப் பல வியத்தகு சாதனைகள் படைத்திருக்கின்றன. தூரத்தையும், நேரத்தையும் மிக சமீபமாக்கியிருக்கின்றன. சௌகரியத்தை அனுபவிக்கிறோம். சந்தேகமேயில்லை.

மாற்றங்கள தேவைதான. மாற்றம் முன்னேற்றமாக இருக்க வேண்டும்.

‘எந்த ஒன்றை அடைய வேண்டுமானாலும் இன்னொன்றை எதையாவது இழந்தாக வேண்டும் அல்லது செலவழித்தாக வேண்டும்’ என்பது உலக நியதி.

ஆரோக்கியத்தைப் பேண சில நேரம் நேரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும், , சில நேரம் சொகுசை,  சில நேரம் செல்வத்தை என்று எதையாவது  விட்டுக் கொடுத்தே ஆக வேண்டியிருக்கும்,  ஆனால் எதையும் இழக்காமல், இன்னொன்றை அடைய நினைத்தால், இயற்கை நம்மிடமிருந்து ஏதாவது இன்னொன்றை எடுத்தே தீரும்.

நடப்பதில்லை., கை, கால் மடக்கி நீட்டி, குனிந்து, நிமிர்ந்து, ஒடியாடி வேலை செய்வதில்லை. ஆனால் ஆரோக்கியம் மட்டும் வேண்டுமென்றால் இயற்கை எப்படி கொடுக்கும்?

இன்றைய பெரும்பாலானோருக்கு முதுகுத் தண்டில் பிரச்னை, முழங்கால் மூட்டு வலி இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தரையில் அமர மறந்ததும், மறுத்ததும் கூடத்தான்,

பலருக்கும் இன்று ஒழுங்காக சம்மணமிட்டு உட்கார முடிவதில்லை, குத்த வைத்து உட்கார முடியவில்லை.

நின்று கொண்டே சமைத்து, நின்று கொண்டே பாத்திரங்கள் துலக்கி, சலவை செய்து நாற்காலியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டு, கழிவறை போய் என்று எல்லாவற்றையும் தரையில் அமராமலேயே செய்து கொள்கிறோம். இதில் உடல் பருமன் வேறு அதிகரித்துக் கொண்டே போக, முழு உடல் பளுவும் முழங்காலில் போய் சேர பிறகு ஏன் முழங்கால் மூட்டு வலி வராது?

நாமாக செய்து கொண்டால் ஆரோக்கியம், அதையே இன்னொருவர் செய்து விட்டால் மருத்துவம்

ஆகவே இயற்கையை மதிப்போம். இயற்கையை நேசிப்போம்.                  இயற்கையை நம் வாழ்விற்குள் அனுமதிப்போம்.                                  இயற்கையோடு இணைந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ்வோம்.









No comments:

Post a Comment