பணி ஓய்விற்கு முன் தயாரிப்புக்கள்
உங்களுக்கு
50 வயது ஆகிறதா?
பணி
ஓய்விற்கான காலத்தை எதிர் நோக்கியிருக்கிறவர்களுக்கான பதிவு இது
பணி ஓய்வு என்பதை அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழி விடுவதாக பொருள் கொள்ளலாம். பணி ஓய்வு என்பது நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற / கொண்டிருந்த பணிக்குத் தானே தவிர உங்கள் உடல் மற்றும் மனதிற்கு அல்ல. ஆகவே உங்கள் உடலையும், மனதையும் என்றும் இளமையாக, ஆரோக்கியமாக, அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்காக இப்பொழுதிருந்தே உங்கள் எதிர்காலத்தை, உங்கள் பணி ஓய்வு காலம் மற்றும் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி கழிப்பது? என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்
உடல் நலம் :
முதலில் உடல் நலம் பற்றி பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் உங்கள் மொத்த செலவில் பெரும் பங்கு வகிக்கும். நாளையும் இது தொடரலாம்.
இது
தவிர (இறைவன் காப்பாற்ற வேண்டும்) திடீரென நிகழும் அவசர கால மருத்துவ செலவுகள் மிகவும்
பிரமாண்டமாக மிரட்டி வருகின்றன.
இவற்றால்
சிறுகச் சிறுக நீங்கள் சேமித்து வைத்த உங்கள் சேமிப்புகளும், பணி ஓய்வு கால தொகைகளும்
சில நாட்களிலேயே கரைந்து போய் விடும் அபாயம் உண்டு.
பணி ஓய்வு காலத்தை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் கழிக்க உடல் நலம் சம்பந்தமாக சில நடவடிக்கைகளை இப்பொழுதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக இருந்து வந்திருந்தாலும் சரி. BP, சுகர் போன்றவை உங்களுக்கு இருந்தாலும் சரி, மருந்து, மாத்திரை, மருத்துவமனை, பரிசோதனைகள் - இவைகளைத் தாண்டி ஆரோக்கியம் தருபவைகளை
நீங்கள் தேட வேண்டும்.
இது நாள் வரை உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி, நடைபயிற்சி, முறையான உணவு பழக்கம் என்று எதுவும் செய்யாமல் இருந்தால் அவற்றை இப்பொழுது துவங்கியே ஆக வேண்டும்.
சிறுகச் சிறுக ஆரம்பித்து அவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை பிற்காலத்தில் உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.
பணி காலத்தில் அதிகாலை எழுவது, அலுவலகம் செல்வது, நிற்பது, நடப்பது என்று அதிகம் உடலுக்கு வேலை கொடுத்தபடி இருப்பீர்கள்
எதிர்வரும் பணி ஓய்வு காலத்தில் இத்தகைய உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விடக்கூடாது. அப்போது செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்.
வழக்கம் போலவே உறக்கம் கலைந்து விடும். நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடல் ஒத்துழைத்தால் வாக்கிங்-குடன் ஜாக்கிங்கும் மேற்கொள்ளுங்கள். சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் அன்றாட தேவைகளை நீங்களே செய்து கொள்ள பாருங்கள். நேரம் போகாது. இரு சக்கர வாகன உபயோகத்தைக் குறைத்து முடிந்த அளவு நடந்து போங்கள். உங்களுக்கேற்ற வேலை அல்லது வியாபாரம் எதையாவது முன்கூட்டியே திட்டமிட்டு அதை ஆரம்பியுங்கள் . நேரமும் போகும், வருமானமும் கை கொடுக்கும்.
ஓய்வு,சோர்வு என்று உட்கார்ந்து விடாதீர்கள். உடல் உழைப்பு குறைந்தால், சும்மா இருந்தாால் உடல் பெருக்கும். மனக்குழப்பங்கள் தோன்றும். ஆரோக்கியம் கெடும்.
இப்படி உடல் நலத்தைப் பேணுங்கள்
பொருள் பலம் :
இப்போதைய உங்கள் மாத வருமானம் ஓய்வுகாலத்தில் குறைந்து போகும். அதை வைத்துத்தான் Manage பண்ண வேண்டும். அது முடியுமா? முடியாதா? என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனாலும் Manage பண்ணியே ஆக வேண்டும்.
பணி ஓய்வு காலத்தில் வருமானத்தைப் பெருக்க முன்பே சொன்னது போல் வேலை அல்லது வியாபாரம் எதையாவது செய்ய இப்பொழுதே திட்டமிடுங்கள்.
உடல் நலமாகவும் இருக்கும். வருமானமும் கிடைக்கும். இப்பொழுதிருந்தே செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவசியம், அத்யாவசியம் எனத் தெரிபவைகளுக்காக மட்டும் செலவு செய்யுங்கள்.
ஓய்வுகாலத்தில் உங்கள் தேவைகளுக்காக இப்பொழுதிருந்தே தனியாக கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா வகை கடன்களையும் விரைவில் அடைத்து விடுங்கள்
பிறரைச் சாராது வாழ வேண்டும் என்பதை விட பிறருக்கு சுமையாக நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணையும் இருந்திடக் கூடாது என்று எண்ணுங்கள்.
அதற்காக உங்கள் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் இப்போதிருந்தே பேணுங்கள்.
உங்கள் பணி ஓய்வின் போது கிடைக்கும் பணத்தை நன்கு திட்டமிட்டு செலவழியுங்கள் அல்லது சேகரியுங்கள்.
உங்கள் பணம் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் உங்கள் ஆயுள் காலம் முழுவதும் தேவைப்படும். இதை மனதில் வைத்துக் கொண்டு திட்டமிடுங்கள்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தவறான இடங்களில் முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள்.
பிறரை நம்பி கடன் கொடுத்து விட்டு பிறகு கஷ்டப்படாதீர்கள்.
உங்கள் வாரிசுகளுக்கும் உடனே பங்கு பிரித்து கொடுத்து விட்டு வெறும் கையில் நிற்காதீர்கள். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் ஒதுக்கியது போக மீதமிருப்பதை தாராளமாக அவர்களுக்கு கொடுங்கள்.
உறவுகள் பலம் :
பிறரைச் சார்ந்துதான் எல்லா உயிர்களும் வாழ்ந்தாக வேண்டும். படைப்பின் டிசைன் அப்படி. மனிதன் மட்டும் இதில் விதிவிலக்கல்ல.
நாமும் பிறரைச் சார்ந்தே வாழ்ந்தாக வேண்டும். நம்மைக் சார்ந்தும் பிறர் சிலர் இருப்பார்கள்.
சேமிப்பு பணம் மட்டுமல்ல. நல்ல உறவுகளும், நல்ல நட்புக்களும் கூட ஒரு வகையில் சேமிப்புதான். நல்ல உறவுகளை, நல்ல நட்புக்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உறவுகளை, தோழமையைப் பேணுங்கள்
பிறரை முழுக்க முழுக்க நம்பி வாழ்வது வேறு, அதே சமயம் அவர்களுக்கு சுமையாக இல்லாத வகையில் கூடிச் சார்ந்து வாழ்வது வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கோபத்தை குறையுங்கள்., புன்னகையை அதிகரியுங்கள்.
குடும்ப நிர்வாகம்:
இது நாள் வரை உங்கள் குடும்பத்திற்கு நீங்கள்தான் ராஜா. நீங்கள் வைப்பதுதான் சட்டம். எதிலும் நீங்கள்தான் முடிவெடுப்பீர்கள். உங்களைச் சார்ந்துதான் உங்கள் குடும்பம் இருந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். உங்கள் உறவினர்களிடமிருந்து உங்களுக்கு மரியாதையும், கவனிப்பும் அதிகம் இருந்திருக்கும்.
இவை அத்தனையும் ஓய்வு காலத்தில் படிப்படியாக மாறலாம். உங்கள் குடும்பத்திலேயே உங்கள் முக்கியத்துவம் குறையலாம். உங்கள் முடிவுகளுக்கு ஆட்சேபம் வரலாம். ஆட்சி பொறுப்பு மாறும்போது இவை நிகழத்தான் செய்யும். இது உலக இயல்பு. தாத்தாவிடமிருந்து அப்பாவிற்கும், அப்பாவிடமிருந்து உங்களுக்கும், உங்களிடமிருந்து உங்கள் பிள்ளைைகளுக்கும் பொறுப்பு மற்றும் நிர்வாகம் கை மாறுவதுதானே இயல்பு. இதை ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.
இதற்காக கோபப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. அப்படி பட்டால் உங்கள் உடல்நலம் தான் பாதிக்கும். அது அனைவரையும் கஷ்டப்படுத்தும்.
புரிந்து கொண்டு பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துப் போங்கள்.
உங்கள் குடும்பம் / உங்கள் பிள்ளைகள்தானே என்று அனுசரித்து போங்கள்.
உங்கள் மக்கள் உங்கள் பணி காலத்திலேயே ஓரளவிற்கு வருவாயிலும், குடும்ப நிர்வாகத்திலும பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும்.
அப்படி வந்திருந்தால் அதற்காக சந்தோஷப்படுங்கள்.
உறவுகளைப் பேணுங்கள். நல்ல நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் மகள் / மகன்களுக்கு திருமண தகுதிகள் வந்திருந்தால் உங்கள் பணி காலத்திலேயே மணம் செய்து வைத்து விடுங்கள். அதாவது அடுத்த தலைமுறைக்கான உங்கள் கடமைகளை முடிந்த வரை பணி காலத்திலேயே முடித்து விடுங்கள்
குடும்பத்தின் அடுத்தவர் சந்தோஷங்களை மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஆசைகள், விருப்பங்கள்:
உங்களுக்கென்று சில, பல ஆசை கள், விருப்பங்கள் இருக்கலாம். இது நாள் வரை தாய், தகப்பன், குடும்பம், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று பிறருக்காக உங்கள் கனவுகளை, ஆசைகளை விட்டுக் கொடுத்து அல்லது தள்ளிப் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
பிறருக்காக உங்கள் வாழ்நாள் ஆசையை நிராசையாக ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம் போல.
உங்கள் ஆசை முழுக்க முழுக்க சுயநலமாகவே மட்டும் என்று இருக்க வேண்டாம்.
பிறரை வருத்தப்பட வைப்பதாகவும் இருக்க வேண்டாம்..
நியாயமானதாகவும், உடல் நிலை மற்றும் பொருளாதார அடிப்படையில்
உங்களால் செய்ய முடிகிறதாகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பத்தை / விருப்பங்களை உங்கள் பணி காலத்திிலேயே நிறைவேற்றிக் கொள்ள பாருங்கள்.
இப்பொழுது முடியாவிட்டால் பணி ஓய்வு காலத்தில் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இப்பொழுதே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.
உங்கள் விருப்பமும், இறைவனின் விருப்பமும் ஒன்றானால் அது நிகழ்ந்தே தீரும்.
பயணங்கள் / யாத்திரை உங்கள் ஆசை எனில் அதை பணி ஓய்வில் மேற்கொள்ள நீங்கள் திட்டமிட்டிருக்கலாம்.
சிலருக்கு அப்பொழுது அதற்கு உடல் ஒத்துழைத்தால் பொருளாதாரம் ஒத்துழைக்காமல் போகலாம்.
சிலருக்கு பொருளாதாரம் ஒத்துழைத்தால் உடல் ஒத்துழைக்காமல் போகலாம்.
ஆகவே வாய்ப்பிருந்தால் பணி காலத்திலேயே உங்கள் பயணங்களை மேற்கொள்வது நல்லது.
பக்தி:
நீங்கள் சார்ந்திருக்கும் சமயத்தில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கடவுள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
முடியாத விஷயங்களைக் கூட அசைக்க முடியாத கடவுள் பக்தி முடித்துக் கொடுக்கும்.
இது மனோதத்துவ ரீதியில் நிருபிக்கப்பட்ட உண்மை.
உங்கள் சமயத்தை நேசியுங்கள். அதே நேரம் பிற சமயத்தையும் மதியுங்கள்.
வாத, பிரதிவாதங்களை தவிர்த்து மனதை அமைதிப்படுத்தும் ஆழ்ந்த பக்தியை செயல்படுத்துங்கள். சகல நேரத்திலும் இறை சிந்தனைையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
கேட்கும் கடமை நம்மிடத்தில்
கொடுக்கும் உரிமையோ இறையிடத்தில்.
மீண்டும் சொல்கிறேன்.
நமது எண்ணமும், இறைவனின் திட்டமும் ஒன்றானால் இவை நிகழும் !
அந்த வரம் பெற்ற மக்களாக நாம் வாழ இறையை பிரார்த்திப்போம். !!









No comments:
Post a Comment