Thursday, December 24, 2020

ஒரு வேளை ஒரு வேலை

 ஒரு வேளை ஒரு வேலை

ஒரே நேரத்தில் 100 விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்பவர்களை ‘சதாவதானி’ என்பார்கள். தமிழகத்தில் அப்படி ஒருவர் இருந்தார் அவர் பெயர் சதாவதானி செய்கு தம்பி பாவலர்.

அதே போல் 10 விஷயங்களை ஒரே நேரத்தில் கவனத்தில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர் ‘தசாவதானி’ இராமைய்யா அவர்கள்.

அவர்களெல்லாம் இலட்சத்தில் அல்ல பல கோடிகளில் ஒருவர்கள்.

ஆனால் சாமானியர்களால் ஒரே நேரத்தில் எத்தனை விஷயங்களை கவனத்தில் கொள்ள முடியும் ?

இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களே அதிக திறமைசாலிகள்.

இதற்கான விளக்கம்.

ஒரு பெண் ஒரே நேரத்தில் அடுப்பில் தோசை சுட்டுக் கொண்டே, இன்னொரு  கையில் செல்போனைப் பிடித்துக் கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் தங்கையுடன் வம்பளந்து கொண்டே, கணவன் சாப்பிடுவதையும் கவனித்துக் கொண்டே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடரையும் பார்த்துக் கொண்டே, தன் வீட்டு ஜன்னல் வழியே பக்கத்து வீட்டுக்காரம்மா வீட்டு வாசற்படியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதையும் கவனிக்க செய்வார். இது பெண்களால் சரவ சாதரணமாய் செய்யக் கூடிய காரியம்.

உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தபடி பூக்கட்டிக் கொண்டே அல்லது வேறு ஏதாவது கை வேலை செய்து கொண்டே, அதே சமயத்தில் டி.வி யில் சீரியல் பார்த்துக் கொண்டே,  சாவியை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடிக் கொண்டிருக்கும் கணவனிடம் பேசவும் பெண்களால் முடியும்.

சமையலறையில் ஒரே நேரத்தில் பல வேலைகளை அதுவும் காலை நேரத்தில் அவர்கள் செய்வது எல்லோர் வீட்டிலும் தினம் தினம் நடப்பதே

ஆனால் ஆண்கள் தொலைக்காட்சியில் செய்தி கேட்டுக் கொண்டிருக்கையில் யாராவது தன்னிடம் பேசினால் செய்தியைக் கவனிக்க முடியாது. (உஷ்.. சப்தம் போடாதே, மிக்சியைக் கொஞ்ச நேரம் போடாதே எனச் சீறி டி.விக்குள்ளேயே கிட்டத்தட்ட போய்விடுவார்கள்). யாரிடமாவது போனில் பேசிக் கொண்டிருக்கையில் டி,வி யில் முக்கியமான காட்சியை விட்டு விட்டதற்காக வருத்தப்படுவோம்.

பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது மனைவி கொண்டு வந்து வைத்து விட்டுப் போன காப்பியை படிக்கும் சுவாரஸ்யத்தில் மறந்து போய் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஆறிப் போன காப்பியை குடித்துப் போகிற அவலமும் ஆண்களுக்கே நடக்கும்.

கல்யாண வீட்டுக் கூட்டத்தில் அறிமுகமே இல்லாத இன்னொரு பெண்ணின் புடவையும், அவள் அணிந்திருந்த கம்மலின் டிசைனையும் தனக்குப் பிடித்திருக்கிற காரணத்தால் ஒரு பெண் மாதக் கணக்கில் மறக்க மாட்டாள், ஆனால் ஆணால் இப்படி இன்னொரு ஆணைக் கவனித்து மனதில் வைத்துக் கொள்வது கடினம்.

இந்த வித்தியாசத்திற்குக் காரணம் படைப்பின் டிசைன்தான்.

ஆண்களால் ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செவ்வனே செய்ய முடியும். இரண்டு வேலைகளைச் செய்தால் ஒன்றுதான் உருப்படியாக இருக்கும்.

ஆனால் பெரும்பாலான ஆண்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்யவே முயற்சிக்கிறோம்.

பலருக்கும் சாப்பிடும்போது டி.வி, பார்த்துக் கொண்டே சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும். சிலருக்கு புத்தகம், சிலருக்கு செல்போன்.

இன்னும் சிலர் கழிவறையில் புத்தகம், செய்தித்தாள் படிப்பார்கள்.   சிலர் வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போது இன்னொருவருடன் பேசிக் கொண்டே அல்லது காதில் ஹெட்போன் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டே நடப்பார்கள் / ஓடுவார்கள்.

பலரும் செல்போனில் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவார்கள்.

அனைவரும் சொல்லும் காரணம், 

ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்வதால் நேரம் மிச்சமாகும்’

ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

                 “இணையத்தால் நேரத்தை மிச்சப்படுத்தினேன்.                                  மீந்த நேரத்தை இணையத்தில் செலவழித்தேன்.”             

நேரத்தை மிச்சப்படுத்த நேர மேலாண்மையைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள். அதை  விட்டு ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்வது சரியானதல்ல.

‘இப்படி செய்ததால் எந்த தவறும் நடந்ததில்லையே’ என பலரும் வாதிடலாம். எல்லா தவறுகளும் அதன் விளைவுகளும் அவ்வப்போதே தெரிவதில்லை.

சாப்பிடும்போது டி.வி, பார்த்துக் கொண்டே அல்லது புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிட்டால் உணவு உள்ளே இறங்கும். ஆனால் உங்கள் ஜீரணம் சரியாக இருக்காது. தரமான ஜீரணத்தால் மட்டுமே முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும். தரம் குறைந்த ஜீரணத்தால் முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காது. போதுமான சத்துக்கள் கிடைக்காத உடல் ஆரோக்கியம் குறைந்தே இருக்கும்.  இது கண்ணுக்குத் தெரியாது. உடனேயும் தெரியாது.

கழிவறையில் பேப்பர் படித்துக் கொண்டே இருப்பவருக்கு முழுமையாக கழிவு வெளியேற உடல் மட்டுமே வழி விடும்.  உள்ளம் உத்தரவு கொடுக்காது.

புத்தகம் வாசிப்பது கூட தொந்தரவுகளில்லாமல் இருக்கும்போதுதான் முடியும். ஏனெனில் கவனம் சிதறினால் படிக்க முடியாது.

ஒரு மீட்டிங்கிற்குப் போனால் கூட  பேச்சைக் கவனித்துக் கேட்டால் மட்டுமே எதையும் உள் வாங்க முடியும்.

ஒரு ஆடியோ (ஒலி) உரையில் பெறப்படும் கவனத்தை விட வீடியோ (ஒளி ஒலி) உரையில் அதிகம் கவனிக்க முடியும். இன்னும் அதே பேச்சை வீடியோ (ஒளி ஒலி) வில் பார்த்துப் பெற்றுக் கொள்வதை விட நேரடியாகப் பார்க்கும்போது அதிகம் உள் வாங்க முடியும். இன்னும் அதையே அந்தக் கூட்டத்தின் கடைசியில் அமர்ந்து கேட்பதைக் காட்டிலும் முன் வரிசையில் உட்கார்ந்து கேட்பது அதிகமதிகம் கவனிக்க முடியும்.

வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போதும் அதே எண்ணத்தில் செய்தால் மட்டுமே அது உடற்பயிற்சியாய் பலனளிக்கும். புரிந்து கொள்ளுங்கள்.

தொலைவில் கண்ணில் பட்டு விட்ட நண்பரை கூவி அழைத்துக் கொண்டே வேகமாக நடந்து அவரைத் துரத்துகிறீர்கள். இப்படி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும் அது நடை பயிற்சியாக ஆகாது. உங்கள் எண்ணம் நண்பரை அடைவதே. உடற்பயிற்சியல்ல.

அதே போல் புறப்பட்டு விட்ட பேருந்தைப் பிடிப்பதற்காக ஓடிச் சென்று விரட்டிப் பிடிக்கிறீர்கள்.   இதுவும் ஓட்டப் பயிற்சியல்ல. உங்கள் எண்ணம் பஸ்ஸைப் பிடிப்பதே. ஜாக்கிங் அல்ல.

வேண்டுதலுக்காக போடுகிற தோப்புக்கரணம் கூட மனதில் பிள்ளையாருக்காக என்ற எண்ணத்தோடு செய்தால் அது வணக்கம், சிறந்த உடற்பயிற்சி என்று நினைத்தால் அது உடற்பயிற்சி. 

இப்படி உங்கள் கவனம் எதுவோ அதுவாகத்தான் செயல் பலனளிக்கும்.

கவனம் சிதறினால் பதற்றம்., ., பதறிய காரியம் சிதறும்.,

ஆனாலும் கவனம் சிதறாத வகையில் சில, பல  வேலைகளை செய்ய முடியும்தான்.

மெல்லிசை கேட்டவாறே, இன்னொருவருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க முடியும்.

பாட்டுக் கேட்டுக் கொண்டே பஸ்ஸில், இரயிலில் பயணம் செய்யலாம், கார் ஓட்டலாம்.

பாட்டுப் பாடிக் கொண்டே தோட்ட வேலை செய்யலாம், துணிகளை அயர்ன் செய்யலாம்.

இவை எல்லாமே கவனம் சிதற வைக்காதவையாக இருந்தால் மட்டுமே நலம்.




இந்த வேலைகளை மேற்கொள்ளும்போது மனது ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் கொள்ளும். இன்னொன்று தன்னிச்சையாகவே நடக்கும். தன்னிச்சையாக நடக்கும் இந்த செயல்பாடுகள் பெரும்பாலும் அன்றாடம் செய்யும் வழக்கமானவையாகவே இருக்கும்.

அதற்காக அன்றாடம் செய்யும் வழக்கமானதுதான் என்று செல்போன் பேசியபடியே வாகனங்களை ஓட்டுவது சரியானதல்ல.

வாகனம் ஓட்டுவது வழக்கமானதுதான் ஆனால் திடுமென எதிரே வரும் அல்லது முந்திச் செல்லும்  எதிர்பாரா வாகனங்கள் தினமும் ஒரே மாதிரி வருவதில்லை. பேச்சில் முழு கவனம் இருக்கும்போது,  கண்களும், கைகளும், கால்களும் தன்னிச்சையாகவே செயல்படும்.  எதிர்பாரா நேரத்தில் கவனம் உடனடியாக திசை திரும்ப வேண்டும். திரும்பாதபோது விபத்துக்கள் நேரிடுகிறது.

51 சதவிகித சாலை விபத்துக்கள் செல்போன் உபயோகத்தால் நிகழ்ந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.( வாகன இயக்கம மற்றும் பாதசாரியாய் சாலையைக் கடக்குதல் உட்பட)

பதிவான விபத்துக்களின் கணக்குதான் இது. பதிவாகாதவைகள் அதிகம் இருக்கும்.

மூளையிலிருந்து உத்தரவு வரும் முன்னரே உடல் மேற்கொள்ளும் அவசர கால துரித நடவடிக்கையான அனிச்சை செயலால் பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் எல்லா நேரமும் அனிச்சை செயல் உதவும் என்று உத்தரவாதம் தர முடியாது.

பல விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் எல்லா நேரமும் அனிச்சை செயல் உதவும் என்று உத்தரவாதம் தர முடியாது.

இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு எல்லாம் இல்லை. பெண்கள் ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கவனிப்பதில் எக்ஸ்பர்ட்டுகள்தான். ஆனால் அவை எல்லாம் வீட்டிற்குள் செய்யும் வழக்கமான வேலைகளுக்குள் அடங்கி விடும்.

யோசனை வேறு எங்காவது இருந்தாலேயே செய்கிற வேலைகளில் தவறுகள் நேரிடுகிறது. இப்படி இருக்க ஒரே நேரத்தில் இரு வேலைகள் என்பதில் மட்டும் எப்படி தவறுகள் நேராது? எனச் சொல்ல முடியும்.

நேரம் மிச்சமானால் வாழ்க்கையில் பல வேலைகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கையே ‘மிஸ்’ ஆகி விட்டால் என்ன செய்வோம்?

ஒரு நேரத்தில் ஒரு வேலை என்பதே நமக்கான  டிசைன்.

மனதை வெல்ல முடியாது. ஆனால் அதனுடன் ஒத்துழைத்தால் மட்டுமே ஆயுள், ஆரோக்கியம் எல்லாம்.

ஆகவே நம் மனதின் டிசைனுக்கேற்ப “ஒரு வேளையில் ஒரு வேலை” என  வாழ்வோம். ஆரோக்கியம் பெறுவோம்

(மூலக்கருத்து  : ஹீலர் பாஸ்கர்)

வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்

 

No comments:

Post a Comment