Saturday, November 28, 2020

ஆன்மீகக் கல்வியின் அவசியம்

 ஆன்மீகக் கல்வியின் அவசியம்


நம் பிள்ளைகளுக்கு
ஆங்கிலம் பயிற்றுவிக்கிறாம். 
அறிவியல் பயிற்றுவிக்கிறாம். 
ஆனால் நல்ல ஆன்மீகம் பயிற்றுவிக்கிறோமா ?

ஆங்கிலமும், அறிவியலும் புறவுலகுக்கு 
ஆனால் ஆன்மீகம் அகவுடலுக்கு

பொருளீட்ட உலகக் கல்வி
பொருள் பொதிந்து வாழ சமயக் கல்வி

வருமானத்தைக் காட்டி கொடுக்க உலகக் கல்வி
தன்மானத்தை கட்டிக் காக்க சமயக் கல்வி

உலகக் கல்வி பொருளாதார அடிப்படையில் அமைந்தது. 
பிள்ளைகள் பெற்றோரையும் பொருளாதார அடிப்படையிலேயே நோக்குவார்கள்.

நல்ல சமயக் கல்வியால் அவரவர் தம் சமயம் பற்றி நன்கு அறிவோர், சமயங்கள் கடந்து பிற சமய துவேஷம் கொள்ளார்.

தன் முதுகே பார்க்காதவர் பிறர் முதுகின் அழுக்கை நோக்கார்.

தன் மத ஈர்ப்பு
பிற மத கார்ப்பு என்பதாகக் கூடாது.

மத நம்பிக்கை வேறு
மதவெறி வேறு என்பதை சொல்லிக் கொடுக்கும் சமயக் கல்வி தேவை.
இது பண்டைய காலத்தில் குருகுலம் போன்றவற்றில் கற்பிக்கப்பட்டன.
முஸ்லீம்களுக்கு அரபி மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டன.
ஆனால் இன்று எல்லாம் பொருளாதாரம் என்கிற இந்தக் காலத்தில்
இது பள்ளிக்கூடங்களில் கிடைக்காது

கோவிலுக்குச் சென்று,
பள்ளிவாசலுக்குச் சென்று,
மாதா கோவிலுக்குச் சென்று
வழிபாடு செய்வது மட்டுமல்ல சமயக் கல்வி .
வேதங்கள் பயில்வதும், 
மந்திரங்கள் ஓதுவதும் மட்டுமல்ல சமயக் கல்வி .


சகல நேரத்திலும் எப்படி வாழ வேண்டும்? என்று கற்றுக் கொடுப்பதே சமயக் கல்வி .

அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை 
எதை, எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பெரியோர்களுக்கு மரியாதை,
வறியோர்களுக்கு கருணை ,
சிறியோர்களிடம் பெருந்தன்மை என சகலமும் கற்பிக்கப்பட வேண்டும்.

உண்பது, உழைப்பது, உறங்குவது எல்லாம் சொல்லித் தரப்பட வேண்டும்


ஆம். இவை பள்ளிக்கூடங்களில் கிடைக்காது
பள்ளிக்கு வெளியே கிடைக்கும்.
அவரவர் வீட்டிலேயே கிடைக்கும்.

இதற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான்.

பெற்றோர்கள் சொன்னால்  
பிள்ளைகள் சொன்னால் கேட்க மாட்டார்கள்தான்
அட்வைஸ் பண்ணினாலும் அவர்களுக்குப் பிடிக்காது.

காலமும், அவர்கள் வயதும் அப்படி.
அதனால் சொல்ல வேண்டாம்.

ஆனால் அவர்கள் முன் பெற்றோர்கள் செய்து காட்ட வேண்டும். 
வாழ்ந்து காட்ட வேண்டும்

பெற்றோர்கள் செய்வதே அவர்களுக்கு பாடம்
பெற்றோர்களே பிள்ளைகளுக்கு சிறந்த ஆசிரியர்கள்.

பெற்றோர்களைப் பார்த்தே பிள்ளைகள் வாழ வேண்டும்

பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு ரியல் ஹீரோக்கள். 
இதைப் புரிய வையுங்கள்.

பாலகுமாரன் சொல்வார்
"இந்த வயசுல அட்வைசும் புடிக்காது. அட்வைஸ் பண்றவாளையும் புடிக்காது. ஆனா நான் உனக்கு இப்ப சொல்றது உன் மேல இருக்கற அக்கறை"
இதையும் புரிய வையுங்கள்.

இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் இதை புரிந்து கொள்வார்கள்.

பெற்றோர்கள் வாழ்க்கையே பிள்ளைகளுக்குப் பாடம்.

அதிகாலை எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை பிள்ளைகள் முன் பெற்றோர்கள் செய்யும் அனைத்துமே அவர்களுக்கு பாடங்கள்.
இது 9 AM to 4 PM  நேர வகுப்புகளில் கிடைக்காது.

நல்ல விஷயங்களைப் பிள்ளைகளிடம் சொல்லலாம், ஏவலாம்.
சொல்லியதை, ஏவியதை அனைத்தையும் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பு வேண்டாம்.

ஆனால் தினம் தினம் பெற்றோர்கள் செய்வதைப் பார்த்தால் 
ஒரு நாள் தானாக செய்வார்கள்.

குட்டிக் குழந்தைப் பருவத்தில் பழக்கம் எளிதில் ஒட்டிக் கொள்ளும்.
வளர்ந்த பிள்ளைகளுக்கு இது தாமதமாகும்.

ரால்ப் வால்டர் சொல்கிறார் :
"திரும்பத் திரும்ப செய்யப்படும் செயல் பழக்கமாய் மாறுகிறது.
பழக்க வழக்கங்கள் குணநலன்களாக (Character) அமைகின்றன. குணநலன்களே வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன."

தமிழ் திரைப்படப் பாடல் ஒன்று பெற்றோர்களுக்கு இப்படி சொல்லும்.
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே "


சென்ற தலைமுறை 
அதிகம் சமயச் சொற்பொழ்வுகள் கேட்டு வளர்ந்தது.
அதிகம் புத்தக வாசிப்பில் வளர்ந்தது.
இன்றைய தலைமுறைக்கு இந்த இரண்டுக்குமே கொடுப்பினை இல்லை.

தேடல் என்பதற்கு இவர்களின் அர்த்தமே வேறு 
எல்லாவற்றையும் Google-ல் தேடும் தலைமுறை இது.
Google நல்லதையும் தேடிக் கொடுக்கும்
ஆனால் எது நல்லது? என்பது அவரவர்க்கு வேறுபடும்.

Google புறவுலகிற்கு நல்ல Search engine.
வருமானம் ஈட்ட, வசதியாய் வாழ வழி சொல்லும் 
நல்ல Search engine Google.

ஆனால் அகத்திற்கு, தனக்குள் தன்னை, பிறரை அறிய முயற்சிக்கும் தேடலுக்கு நல்ல ஆன்மீகம்தான் சிறந்த  Search engine. 
இது என் கருத்து. மற்றவர்களுக்கு வேறுபடலாம்.

ஆன்மீகக் கல்வி -
அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொடுக்கும்
ஆசைகளை குறைக்கக் கற்றுக் கொடுக்கும்
ஆன்மாவை அமைதிப்படுத்தும்.
நம்பிக்கை வளர்க்கும்.

'எல்லாம் அவன் செயல்' என்பது துறவு வார்த்தை அல்ல
ஆணவம், அகங்காரம், தற்பெருமை தவிர்த்து தன்னடக்கம் சொல்லும் வார்த்தை.
"போனால் போகட்டும் போடா"  என்பது தோற்றுப் போனவன் விரக்தியில் பாடுவதல்ல. 
'நடந்தது நடந்து விட்டது, அடுத்து நடக்கப் போவதைப் பார்ப்போம்' என்று தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள்.
ஆன்மீகமும் இதையேதான் கற்றுக் கொடுக்கும்.

இவை பெற்றோர் விருப்பம், பெற்றோர் கொள்கைகள்.
இவற்றை பிள்ளைகள் மேல் திணிக்கலாமா? 
அவர்கள் வளர்ந்த பின் அவர்களே தெரிந்து கொள்வார்களே ! 
அவர்களுக்கென்றும் தனிப்பட்ட விருப்பம், கொள்கை இருக்கலாமே !

நாம் எதற்கு அவர்களிடம் 'கருத்துத் திணிப்பு, விருப்பத் திணிப்பு' செய்ய வேண்டும்?  எனத் தோன்றலாம்

வயதும், வயதுக்கேற்ற பக்குவமும் வராத காலத்தில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது பெற்றோர் தம் பொறுப்பு, கடமை.

உடலுக்கு உணவும், உடையும் கொடுக்க வேண்டிய கடமை போல் உள்ளத்திற்கு வேண்டியதையும்  கொடுக்க வேண்டியதும் கடமை தானே.

பெற்றோர்கள் செய்வது ஒரு வழி காட்டல். அவ்வளவுதான்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது தமிழ் பழமொழி.
இதை மனதில் கொண்டு சிறு வயது முதலே நல்ல ஆன்மீகத்தை, நல்லொழுக்கங்களை,முறையாக வாழும் வழிகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

29.11.2020

Saturday, November 21, 2020

மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள் : எல்லாம் “இதம்” மயம்

 மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள் 

எல்லாம் “இதம்” மயம்

“முன்னோரெல்லாம் மூடர்களில்லை, நமக்குண்டு பண்பாடு” என்ற ஒரு வரி ‘பட்டிக்காடா? பட்டணமா?’  திரைப்படப் பாட்டில் வரும். மறந்திருக்க மாட்டீர்கள்.  இது சரியா?

நம் முன்னோர்கள் சடங்கு, சம்பிரதாயம், பழக்க வழக்கம் என்று  பல விஷயங்களை நம் மண்ணுக்கும், காலச் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் செய்து வந்திருக்கிறார்கள்.

இன்று நம் மண்ணும் மாறி விட்டது. காலச் சூழ்நிலைகளும் மாறி விட்டன. நம் பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விட்டது. இவை காலத்தின் நிர்ப்பந்தங்கள்.

தாத்தா வெட்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியுமா? பாட்டி வைத்திருந்த தங்க ஊசி என்பதற்காக எடுத்துக் கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா? என்று நம்நாட்டில் ஒரு சொலவடை உண்டு.

உண்மைதான் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை. மாற்றம் ஒன்றே மாறாதது – இதுவே உண்மையானது..

மாற்றங்கள் வளர்ச்சியாய் இருக்க வேண்டும். நல்லதாய் இருக்க வேண்டும்.

அழிவைத் தரக் கூடாது. கெடுதல் செய்யக் கூடாது..

இதுவே மாற்றங்கள் குறித்த மனித குலம் அனைத்திற்குமான நோக்கம்.

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் நம் வீடுகளில் நாற்காலி என்பது அரிது. திண்ணை வைத்த வீடுகள்தான் இருக்கும்.

வீட்டுக்கு யாராவது வந்தால் உட்காருவதற்கு வெறும் தரை, முக்காலி, கோரைப்பாய், ஜமுக்காளம், மர நாற்காலி இப்படி பல இருக்கும். வந்திருப்பவர் மற்றும் வீட்டுக்காரர்களின் வசதிகள் பொறுத்து இவை மாறுபடும்.

படுப்பதற்கு பெரும்பாலும் கோரைப்பாய்கள். கயிற்றுக் கட்டில்கள்.

கட்டிலும், இலவம் பஞ்சு மெத்தையும் செல்வ வளத்தின் உச்சம்.

விடுகளின் தரை மண் தரையாக இருக்கும் அல்லது சிமெண்ட் தரையாக இருக்கும்.

செருப்புக்கள் அணிவது பல நேரம் இருக்காது. அப்படியே அணிந்தாலும் அவை முரட்டுத் தனமானவையாகவே இருக்கும்.

நடப்பதற்கு அஞ்சாதவர்கள். சுமைகளையும், குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சாதாரணமாக பல மைல்கள் நடந்தார்கள்.

சைக்கிள் உபயோகமும் அதிகம் இருந்தன.

கிணற்றிலிருந்து நீர் இறைத்தார்கள் அல்லது குடம் தூக்கி தொலைதூரம் சென்று அல்லது தெருக் குழாய்களிலிருந்து நீர் கொண்டு வந்தார்கள

துணிகள் துவைப்பது, பாத்திரங்கள் துலக்குவது, வீடு பெருக்குவது, போன்ற வீட்டு வேலைகள் அனைத்தையும் அவரவர்களே செய்து கொண்டனர்.

உழைத்ததன் அடையாளமாய் அவர்களின் கைகளில் காப்பு காய்த்திருக்கும்.

வயதானவர்களுக்குக் கூட பற்கள் வலுவானதாகவும், சொத்தைகளில்லாமலும் இருக்கும்.

அவர்கள் எலும்புகளும், உடலும் வலுவாயிருந்தன.

இன்று பெரும்பாலும் மெத்து, மெத்தென குஷன் ஷோபா வகைகள், வகை வகையான சேர்கள், தனிப்படுக்கை அறைகளில் அகன்ற ஃபோம் மெத்தைகள், தலையணைகள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.

 


தரைகள் குளு குளுவென கண்ணாடி மாதிரியான மார்பிள், கிரானைட், டைல்ஸ் என விதமான தரைகள், வீட்டுக்குள்ளேயே நடப்பதற்கும் தனிச்செருப்பு,

மிக மிக மிருதுவான செருப்புக்களின் உபயோகம்.

கௌரவக் குறைச்சலாய் கருதப்படும் சைக்கிள் உபயோகம், தெரு முனையிலிருக்கும் கடைக்குப் போகக் கூட டூ வீலர்,

ஒரு சுவிட்சைப் போட்டால் போதும் மேல் நிலைத் தொட்டியில் தண்ணீர்,

எல்லா அறைகளிலும் திருப்பினால் தண்ணீர் கொட்டும் குழாய் வசதிகள்.

அன்றாட வீட்டு வேலைகளுக்கு எந்திரங்கள் அல்லது வேலையாட்கள்.

தவறிச் செய்கிற செயல்கள், வேலைகள் எல்லாவற்றிலும் இலகுத்தன்மை, மென்மை.

குனிந்து நிமிர்ந்து, ஓடியாடி  வேலை செய்வதை ஒதுக்கி விட்டு உடற்பயிற்சிக்காக என தனியாக  நேரம்  

கடினமான  உணவு வகைகள் (கரும்பு, எலும்பு போன்றவைகள்) ஒதுக்கப்பட்டு லேசானதும், மிருதுவானதுமான உணவு வகைகளுக்கே முன்னுரிமை.

இப்படி காலையில் எழுந்ததும் பல துலக்கும் சாஃப்ட் பிரஷ்,

குளிக்கும்போது வலிக்காது தேய்த்துக் கொள்ளும் மென்மையான நார், துடைத்துக் கொள்ளும் பூந்துவாலை டவல், 

அணிந்து கொள்கிற மென்மையான காட்டன் (?)உடைகள், 

மென்மையான செருப்புக்கள், நடக்க மறுத்து உபயோகிக்கும் வாகனங்கள்,

 உணவு வகைகள் ஷோபாக்கள் படுக்கைகள் என உபயோகிக்கும் அனைத்திலும்  மென்மை…. மென்மை….. மென்மை.            

எல்லாம் இதம் மயம்


எல்லாம் இலகு மயம்

மனிதனின் உடலெங்கும் 76,000 அக்கு புள்ளிகள் உள்ளதாகவும், அதில் 361 புள்ளிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும் சீன மருத்துவமான அக்குபங்சர் தெரிவிக்கிறது

இதில் பல புள்ளிகள் நம்மை அறியாமலேயே நம் தினசரி நடவடிக்கைகளினால் அழுத்தப்பட்டு தூண்டப்படும். இது நன்கு அழுத்தப்படும்போது மட்டுமே தூண்டப்படும். நம் முன்னோர்கள் இதில் எந்தப் புள்ளி எதைக் குணப்படுத்தும் என்பதெல்லாம் அறிந்தவர்களா என்பது தெரியாது  ஆனால்  தங்களது வழக்கமான, கடினமான செயல்பாடுகள் மூலம் தங்களைத் தாங்களே ஆரோக்கியப்படுத்திக் கொண்டார்கள்

‘கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, ஒரு வேளை கிடைத்தாலும் அது நிலைக்காது‘ என்பதைப் புரிந்து வாழ்ந்தார்கள்.

அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த மனநிலை படிப்படியாக மாறிப் போய் விட்டது. ‘நாம் பட்ட கஷ்டம் நம் பிள்ளைகளுக்கு வரக் கூடாது’ என்ற பெற்றோருடைய கரிசனம் இந்த மாற்றத்திற்கு ஒரு மிக முக்கிய காரணம். இதன் விளைவு, எதையும் எளிதாகப் பெற விரும்பும் அடுத்த தலைமுறையினரின் பேராசை  விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

எப்படியாவது வசதியாக வாழ வேண்டும் எண்ணம் எல்லோரிடத்திலும் பரவி இருக்கிறது.

குறுக்கு வழிகள் தேடும் போக்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

கூடுதல் கட்டணம் என்றாலும் பரவாயில்லை, பயணம் சௌகரியமாக இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மைக்கு நம் அனைவரையும் இது கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

இன்பமும், துன்பமும் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளாத, எதையும் தாங்கும் இதயம் இல்லாத, தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தலைமுறை இப்பொழுது வளர்ந்து கொண்டே இருக்கிறது

நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கள் இன்றைக்குப் பல வியத்தகு சாதனைகள் படைத்திருக்கின்றன. தூரத்தையும், நேரத்தையும் மிக சமீபமாக்கியிருக்கின்றன. சௌகரியத்தை அனுபவிக்கிறோம். சந்தேகமேயில்லை.

மாற்றங்கள தேவைதான. மாற்றம் முன்னேற்றமாக இருக்க வேண்டும்.

‘எந்த ஒன்றை அடைய வேண்டுமானாலும் இன்னொன்றை எதையாவது இழந்தாக வேண்டும் அல்லது செலவழித்தாக வேண்டும்’ என்பது உலக நியதி.

ஆரோக்கியத்தைப் பேண சில நேரம் நேரத்தை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும், , சில நேரம் சொகுசை,  சில நேரம் செல்வத்தை என்று எதையாவது  விட்டுக் கொடுத்தே ஆக வேண்டியிருக்கும்,  ஆனால் எதையும் இழக்காமல், இன்னொன்றை அடைய நினைத்தால், இயற்கை நம்மிடமிருந்து ஏதாவது இன்னொன்றை எடுத்தே தீரும்.

நடப்பதில்லை., கை, கால் மடக்கி நீட்டி, குனிந்து, நிமிர்ந்து, ஒடியாடி வேலை செய்வதில்லை. ஆனால் ஆரோக்கியம் மட்டும் வேண்டுமென்றால் இயற்கை எப்படி கொடுக்கும்?

இன்றைய பெரும்பாலானோருக்கு முதுகுத் தண்டில் பிரச்னை, முழங்கால் மூட்டு வலி இதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் தரையில் அமர மறந்ததும், மறுத்ததும் கூடத்தான்,

பலருக்கும் இன்று ஒழுங்காக சம்மணமிட்டு உட்கார முடிவதில்லை, குத்த வைத்து உட்கார முடியவில்லை.

நின்று கொண்டே சமைத்து, நின்று கொண்டே பாத்திரங்கள் துலக்கி, சலவை செய்து நாற்காலியில் மட்டுமே அமர்ந்து சாப்பிட்டு, கழிவறை போய் என்று எல்லாவற்றையும் தரையில் அமராமலேயே செய்து கொள்கிறோம். இதில் உடல் பருமன் வேறு அதிகரித்துக் கொண்டே போக, முழு உடல் பளுவும் முழங்காலில் போய் சேர பிறகு ஏன் முழங்கால் மூட்டு வலி வராது?

நாமாக செய்து கொண்டால் ஆரோக்கியம், அதையே இன்னொருவர் செய்து விட்டால் மருத்துவம்

ஆகவே இயற்கையை மதிப்போம். இயற்கையை நேசிப்போம்.                  இயற்கையை நம் வாழ்விற்குள் அனுமதிப்போம்.                                  இயற்கையோடு இணைந்து கொள்வோம்

ஆரோக்கியமாக வாழ்வோம்.









Thursday, November 19, 2020

வாழ்க்கை : விதியா ? விருப்பமா?

வாழ்க்கை : விதியா ? விருப்பமா?


உன்னை வாழ்த்த  மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள்.

அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும்

இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.

ஒவ்வொரு மனிதனும்  தனித்தனி  ஜென்மங்கள்.

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும்.  குணங்களும் இருக்கும்.

அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.

அவர்கள் போகும் வரை போகட்டும்.

போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும்.

அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன்,மனைவியாக,இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், உறவுகளாக இருந்தாலும்,அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.                                                        

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  கர்மா. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்,                                                                                                  பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். 

அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார் ?,தன் குணம் என்ன ?,என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். 

எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம்  வந்து போகும்  உலகத்தில் பிறந்திருக்கிறோம்.

அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர வேறு எதையும் செய்து காட்ட முடியாது.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே.

கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் இறைவன்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது.

இயற்கையின் சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள். 

அதில் நன்மை வந்தாலும் ,தீமை வந்தாலும் ,உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .

அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும்

அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.

அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார்.                                                   

அது உன் பிறவி பிராப்த்தை பொறுத்து இருக்கிறது. 

அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்

பெண்ணாக இருந்தாலும் ,ஆணாக இருந்தாலும் ,வரும் துன்பத்தை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும் உன் கவலையும்   உன்னை பலகீனமாக காட்டிவிடும்.

அழுவதாலும், சோர்ந்து போவதாலும்  ஒன்றும் நடக்கப்போவதில்லை.

எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும்.

அழுது சுமப்பதை காட்டிலும்  ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான்  ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் .என்ற உண்மையை உணர்ந்துகொள்.

இந்த பக்குவத்தை அடைந்துவிட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

         நற்பவி

         எல்லா வளமும்   உண்டாகட்டும்

        வாழ்க வளமுடன்

Wednesday, November 18, 2020

பணி ஓய்விற்கு முன் தயாரிப்புக்கள்

       பணி ஓய்விற்கு முன் தயாரிப்புக்கள்


உங்களுக்கு 50 வயது ஆகிறதா?

பணி ஓய்விற்கான காலத்தை எதிர் நோக்கியிருக்கிறவர்களுக்கான பதிவு இது

பணி ஓய்வு என்பதை  அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழி விடுவதாக பொருள் கொள்ளலாம். பணி ஓய்வு என்பது நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற /  கொண்டிருந்த  பணிக்குத் தானே தவிர உங்கள் உடல் மற்றும் மனதிற்கு அல்ல. ஆகவே உங்கள் உடலையும், மனதையும் என்றும் இளமையாக, ஆரோக்கியமாக, அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்காக இப்பொழுதிருந்தே உங்கள் எதிர்காலத்தை, உங்கள் பணி ஓய்வு காலம் மற்றும் மீதமிருக்கும் வாழ்க்கையை எப்படி கழிப்பது? என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம்

உடல் நலம் :

முதலில் உடல் நலம் பற்றி பார்ப்போம்.

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் உங்கள் மொத்த செலவில் பெரும் பங்கு வகிக்கும். நாளையும் இது தொடரலாம்.

இது தவிர (இறைவன் காப்பாற்ற வேண்டும்) திடீரென நிகழும் அவசர கால மருத்துவ செலவுகள் மிகவும் பிரமாண்டமாக மிரட்டி வருகின்றன.

இவற்றால் சிறுகச் சிறுக நீங்கள் சேமித்து வைத்த உங்கள் சேமிப்புகளும், பணி ஓய்வு கால தொகைகளும் சில நாட்களிலேயே கரைந்து போய் விடும் அபாயம் உண்டு.

பணி ஓய்வு காலத்தை ஆரோக்கியமாகவும்,  அமைதியாகவும் கழிக்க உடல் நலம் சம்பந்தமாக சில நடவடிக்கைகளை இப்பொழுதிருந்தே மேற்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே ஆரோக்கியமாக இருந்து வந்திருந்தாலும் சரி. BP, சுகர் போன்றவை உங்களுக்கு இருந்தாலும் சரி, மருந்து, மாத்திரை, மருத்துவமனை, பரிசோதனைகள் - இவைகளைத் தாண்டி ஆரோக்கியம் தருபவைகளை  நீங்கள் தேட வேண்டும்.

இது நாள் வரை உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி, நடைபயிற்சி, முறையான உணவு பழக்கம் என்று எதுவும் செய்யாமல் இருந்தால் அவற்றை இப்பொழுது துவங்கியே ஆக வேண்டும்.

சிறுகச் சிறுக ஆரம்பித்து அவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவை பிற்காலத்தில் உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும்.

பணி காலத்தில் அதிகாலை எழுவது, அலுவலகம் செல்வது, நிற்பது, நடப்பது என்று அதிகம் உடலுக்கு வேலை கொடுத்தபடி இருப்பீர்கள்

எதிர்வரும் பணி ஓய்வு காலத்தில் இத்தகைய  உடல் உழைப்புக்கு ஓய்வு கொடுத்து விடக்கூடாது. அப்போது செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்.

வழக்கம் போலவே உறக்கம் கலைந்து விடும். நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடல் ஒத்துழைத்தால் வாக்கிங்-குடன் ஜாக்கிங்கும்  மேற்கொள்ளுங்கள். சிறு உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் அன்றாட தேவைகளை நீங்களே செய்து கொள்ள பாருங்கள்.  நேரம் போகாது. இரு சக்கர வாகன உபயோகத்தைக் குறைத்து முடிந்த அளவு நடந்து போங்கள். உங்களுக்கேற்ற வேலை அல்லது வியாபாரம் எதையாவது முன்கூட்டியே திட்டமிட்டு அதை ஆரம்பியுங்கள் . நேரமும் போகும், வருமானமும் கை கொடுக்கும்.

ஓய்வு,சோர்வு என்று உட்கார்ந்து விடாதீர்கள். உடல் உழைப்பு குறைந்தால், சும்மா இருந்தாால் உடல் பெருக்கும். மனக்குழப்பங்கள் தோன்றும். ஆரோக்கியம் கெடும்.

இப்படி உடல் நலத்தைப் பேணுங்கள்

பொருள் பலம் :


இப்போதைய உங்கள் மாத வருமானம் ஓய்வுகாலத்தில்  குறைந்து போகும். அதை வைத்துத்தான் Manage  பண்ண வேண்டும். அது முடியுமா? முடியாதா? என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனாலும் Manage பண்ணியே ஆக வேண்டும்.

பணி ஓய்வு காலத்தில் வருமானத்தைப் பெருக்க முன்பே சொன்னது போல் வேலை அல்லது வியாபாரம் எதையாவது செய்ய இப்பொழுதே திட்டமிடுங்கள்.

உடல் நலமாகவும் இருக்கும். வருமானமும் கிடைக்கும். இப்பொழுதிருந்தே செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.  அவசியம், அத்யாவசியம் எனத் தெரிபவைகளுக்காக மட்டும் செலவு செய்யுங்கள்.

ஓய்வுகாலத்தில் உங்கள் தேவைகளுக்காக இப்பொழுதிருந்தே தனியாக கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் எல்லா வகை கடன்களையும் விரைவில் அடைத்து விடுங்கள்

பிறரைச் சாராது வாழ வேண்டும் என்பதை விட பிறருக்கு சுமையாக நீங்களும், உங்கள் வாழ்க்கைத் துணையும் இருந்திடக் கூடாது என்று எண்ணுங்கள்.

அதற்காக உங்கள் உடல் நலத்தையும், பொருளாதாரத்தையும் இப்போதிருந்தே  பேணுங்கள்.

உங்கள் பணி ஓய்வின் போது கிடைக்கும் பணத்தை நன்கு திட்டமிட்டு செலவழியுங்கள் அல்லது சேகரியுங்கள்.

உங்கள் பணம் உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் உங்கள் ஆயுள் காலம் முழுவதும் தேவைப்படும். இதை மனதில் வைத்துக் கொண்டு திட்டமிடுங்கள்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தவறான இடங்களில் முதலீடு செய்து ஏமாந்து விடாதீர்கள்.

பிறரை நம்பி கடன் கொடுத்து விட்டு பிறகு கஷ்டப்படாதீர்கள்.

உங்கள் வாரிசுகளுக்கும் உடனே  பங்கு பிரித்து கொடுத்து விட்டு வெறும் கையில் நிற்காதீர்கள். உங்களுக்கும், உங்கள் துணைக்கும் ஒதுக்கியது போக மீதமிருப்பதை தாராளமாக அவர்களுக்கு கொடுங்கள்.


உறவுகள் பலம் :


பிறரைச் சார்ந்துதான் எல்லா உயிர்களும் வாழ்ந்தாக வேண்டும். படைப்பின் டிசைன் அப்படி. மனிதன் மட்டும் இதில் விதிவிலக்கல்ல.

நாமும் பிறரைச் சார்ந்தே வாழ்ந்தாக வேண்டும். நம்மைக் சார்ந்தும் பிறர் சிலர் இருப்பார்கள்.

சேமிப்பு பணம் மட்டுமல்ல. நல்ல உறவுகளும், நல்ல நட்புக்களும் கூட ஒரு வகையில் சேமிப்புதான். நல்ல உறவுகளை, நல்ல நட்புக்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உறவுகளை, தோழமையைப் பேணுங்கள்

பிறரை முழுக்க முழுக்க நம்பி வாழ்வது வேறு, அதே சமயம் அவர்களுக்கு சுமையாக இல்லாத வகையில் கூடிச் சார்ந்து வாழ்வது வேறு. இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கோபத்தை குறையுங்கள்., புன்னகையை அதிகரியுங்கள்.

குடும்ப நிர்வாகம்:

இது நாள் வரை உங்கள் குடும்பத்திற்கு நீங்கள்தான் ராஜா. நீங்கள் வைப்பதுதான் சட்டம். எதிலும் நீங்கள்தான் முடிவெடுப்பீர்கள். உங்களைச் சார்ந்துதான் உங்கள் குடும்பம் இருந்திருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருப்பார்கள். உங்கள் உறவினர்களிடமிருந்து உங்களுக்கு  மரியாதையும், கவனிப்பும் அதிகம் இருந்திருக்கும்.

இவை அத்தனையும் ஓய்வு காலத்தில் படிப்படியாக மாறலாம். உங்கள் குடும்பத்திலேயே உங்கள் முக்கியத்துவம் குறையலாம். உங்கள் முடிவுகளுக்கு ஆட்சேபம் வரலாம். ஆட்சி பொறுப்பு மாறும்போது இவை நிகழத்தான் செய்யும். இது உலக இயல்பு. தாத்தாவிடமிருந்து அப்பாவிற்கும், அப்பாவிடமிருந்து உங்களுக்கும், உங்களிடமிருந்து உங்கள் பிள்ளைைகளுக்கும் பொறுப்பு  மற்றும் நிர்வாகம் கை மாறுவதுதானே இயல்பு. இதை ஏற்றுக் கொண்டுதானே  ஆக வேண்டும்.

இதற்காக கோபப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. அப்படி பட்டால் உங்கள் உடல்நலம் தான் பாதிக்கும். அது அனைவரையும் கஷ்டப்படுத்தும்.

புரிந்து கொண்டு பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துப் போங்கள்.

உங்கள் குடும்பம் / உங்கள் பிள்ளைகள்தானே என்று அனுசரித்து போங்கள்.

உங்கள் மக்கள் உங்கள் பணி காலத்திலேயே ஓரளவிற்கு வருவாயிலும், குடும்ப நிர்வாகத்திலும பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும்.

அப்படி வந்திருந்தால் அதற்காக சந்தோஷப்படுங்கள்.

உறவுகளைப் பேணுங்கள். நல்ல நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் மகள் / மகன்களுக்கு திருமண தகுதிகள் வந்திருந்தால் உங்கள் பணி காலத்திலேயே மணம் செய்து வைத்து விடுங்கள். அதாவது அடுத்த தலைமுறைக்கான உங்கள் கடமைகளை முடிந்த வரை பணி காலத்திலேயே முடித்து விடுங்கள்

குடும்பத்தின் அடுத்தவர் சந்தோஷங்களை மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஆசைகள், விருப்பங்கள்:

உங்களுக்கென்று சில, பல ஆசை கள், விருப்பங்கள் இருக்கலாம்.  இது நாள் வரை தாய், தகப்பன், குடும்பம், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று பிறருக்காக உங்கள் கனவுகளை, ஆசைகளை விட்டுக் கொடுத்து அல்லது தள்ளிப் போட்டு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

பிறருக்காக உங்கள் வாழ்நாள் ஆசையை நிராசையாக ஆக்கிக் கொள்ள வேண்டிய  அவசியமில்லை.  அது உங்கள் ஆன்மாவுக்கு நீங்கள் செய்யும் துரோகம் போல.

உங்கள் ஆசை முழுக்க முழுக்க சுயநலமாகவே மட்டும் என்று இருக்க வேண்டாம்.

பிறரை வருத்தப்பட வைப்பதாகவும் இருக்க வேண்டாம்..

நியாயமானதாகவும், உடல் நிலை மற்றும் பொருளாதார அடிப்படையில்

உங்களால் செய்ய முடிகிறதாகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் விருப்பத்தை / விருப்பங்களை உங்கள் பணி காலத்திிலேயே நிறைவேற்றிக் கொள்ள பாருங்கள்.

இப்பொழுது முடியாவிட்டால் பணி ஓய்வு காலத்தில் அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இப்பொழுதே அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

உங்கள் விருப்பமும், இறைவனின் விருப்பமும் ஒன்றானால் அது நிகழ்ந்தே தீரும்.

பயணங்கள் / யாத்திரை உங்கள் ஆசை எனில் அதை பணி ஓய்வில் மேற்கொள்ள நீங்கள் திட்டமிட்டிருக்கலாம்.

சிலருக்கு அப்பொழுது  அதற்கு உடல் ஒத்துழைத்தால் பொருளாதாரம் ஒத்துழைக்காமல் போகலாம்.

சிலருக்கு பொருளாதாரம் ஒத்துழைத்தால்  உடல் ஒத்துழைக்காமல் போகலாம்.

ஆகவே வாய்ப்பிருந்தால் பணி காலத்திலேயே உங்கள் பயணங்களை மேற்கொள்வது நல்லது.

பக்தி:

நீங்கள் சார்ந்திருக்கும் சமயத்தில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்.  

கடவுள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.

முடியாத விஷயங்களைக் கூட அசைக்க முடியாத கடவுள் பக்தி முடித்துக் கொடுக்கும்.

இது மனோதத்துவ ரீதியில் நிருபிக்கப்பட்ட உண்மை.

உங்கள் சமயத்தை நேசியுங்கள். அதே நேரம் பிற சமயத்தையும் மதியுங்கள்.

வாத, பிரதிவாதங்களை தவிர்த்து மனதை அமைதிப்படுத்தும் ஆழ்ந்த பக்தியை செயல்படுத்துங்கள். சகல நேரத்திலும் இறை சிந்தனைையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

 இவை  அனைத்தும் நாம் நமக்காக போட்டுக் கொள்கிற  திட்டங்களே.

 

கேட்கும் கடமை நம்மிடத்தில்

கொடுக்கும் உரிமையோ இறையிடத்தில்.

மீண்டும் சொல்கிறேன்.

நமது எண்ணமும், இறைவனின் திட்டமும் ஒன்றானால் இவை நிகழும் !

அந்த வரம் பெற்ற மக்களாக நாம் வாழ இறையை பிரார்த்திப்போம். !!