மறக்க(டிக்க)ப்பட்டமரபுகள் - வெற்றிலை
நம்
முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக பல நல்ல விஷயங்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.
அவற்றில் பலவும் இன்று கை விடப்பட்டிருக்கின்றன. அவர்கள் எதையும் அர்த்தமின்றி செய்யவில்லை.
இன்றும் தொடரும் சிலவற்றிலும்கூட சடங்கு,
சம்பிரதாயங்கள் மட்டுமே மீந்திருக்கின்றன, அதற்கான காரண, காரியங்கள்
மறக்கடிக்கப்பட்டு விட்டன.
மறக்கடிக்கப்பட்டவை பல இருந்தாலும் அவற்றுள் முதன்மையாக,
வெற்றிலை என்னும் தாம்பூலம் எப்படி, எதற்காக மறக்கடிக்கப்பட்டது? இன்று அதன் நிலை
என்ன? என்பதை iஇனிப் பார்க்கலாம்.
வெற்றிலை,
தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான முழு வாழ்க்கையோடும் பின்னிப்
பிணைந்தது.
இந்து
மத இறை வழிபாட்டில் பூஜை பொருட்களில் வெற்றிலை அவசியமான ஒன்று.
திருமணம்,
மணப்பொருத்தம், நாள் குறித்தல், நிச்சயதார்த்தம், சுபமுகூர்த்தம், புதிய வீடு
கட்ட, முகூர்த்தகால் நட என பல வகை சுப மங்கல நிகழ்வுகளில் வெற்றிலையின் பங்கு
அவசியமானது. திருமணத்திற்கு பிறகு நடைபெறும் சாந்தி முகூர்த்தங்களிலும்
வெற்றிலையில்லாமல் இருந்ததில்லை.
புதிதாக
திருமணம் ஆனவர்கள் மற்றும் குழந்தை பிறந்து வீடு திரும்பும் பொழுது, கண் திருஷ்டி
நீங்குவதற்கு போன்ற பலவற்றிற்காகவும் முச்சந்தி மண்ணுடன்
வெற்றிலை சேர்த்து தலையை சுற்றி போடுவது என்பது இன்றும் தமிழக கிராமங்களிலும்,
சிறுநகரங்களிலும் வழக்கத்தில் உள்ளவையே. நகரங்களில் கூட சில வீடுகளில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.
தொழில்
ரீதியிலான ஒப்பந்தம், மரியாதையுடன் வழங்கப்படும் பணப்பரிமாற்றங்கள், சிறப்பு
அழைப்புக்கள், காணிக்கைகள், தட்சணை போன்ற
யாவற்றிலும் வெற்றிலை முன்னிலை வகிக்கும்.
இப்படி
மங்கல, அமங்கல நிகழ்ச்சிகள் யாவிலும் வெற்றிலை தவிர்க்க முடியாத ஒன்று.
வீட்டிற்கு
வரும் விருந்தாளிகளை இன்று டீ, காபி போன்றவை கொடுத்து உபசரிக்கிறோம். ஆனால் முன்பெல்லாம் வெற்றிலை, பாக்கு வைத்தே
உபசரித்தோம்.
மலேசியாவிலிருந்து
இறக்குமதியானது வெற்றிலை என்றாலும் உணவுக்குப்பின் தாம்பூலம் தரிப்பது பழங்காலத்
தமிழர் பண்பாடு. பத்துப் பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியிலும், கலிங்கத்துப்
பரணியிலும், சி லப்பதிகாரத்திலும், கம்ப ராமாயணத்திலும், வெற்றிலை பற்றிய
குறிப்புக்கள் உண்டு. தாம்பூலம், தாம்பத்ய இன்பத்தை
கூட்டும் என்பது யாவரும் அறிந்ததுதானே.
இன்னும் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி எழுதினால் பல
பக்கங்களுக்கு எழுதலாம். நெஞ்சு சளி, தலைவலி போன்றவற்றிற்காக உடனடி நிவாரணியான வெற்றிலை,
ஒரு மருத்துவ மூலிகையாகும்.
பொதுவாக வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும்போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படையச் செய்கிறது
அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
வாதம்,
பித்தம், கபம் போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ உடலுக்கு நோய் வருவதாக சித்த
வைத்தியம் சொல்கிறது. ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று திருவள்ளுவரும்
அதை உறுதிப்படுத்துறார்
பாக்கில் இருந்து கிடைக்கும்
துவர்ப்பு பித்தத்தை கட்டுப்படுத்தும்.
சுண்ணாம்பில் உள்ள காரம்
வாதத்தை போக்கும் வல்லமை உடையது.
வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கிவிடும்.
இதனால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உண்ணும்
போது உணவை நன்கு மென்று சாப்பிடும் வழக்கம் போய் இன்று உணவை அப்படியே விழுங்கும்
காலத்தில் இருக்கிறோம். உணவுக்குப் பின் வெற்றிலையை வாயில் இட்டு மெல்லுவதால் அதிக
எச்சில் சுரக்கப்பட்டு அதனால் ஜீரண சக்தி
அதிகரிக்கும்.. ஜீரணமண்டலம் நன்றாக செயல்பட்டாலே பல நோய்கள் நம்மை விட்டு நீங்கும்.
அதற்காகத்தான்
நம் முன்னோர்கள் உண்ணும் நேரத்திற்கு தகுந்தாற் போல் தாம்பூலம் தரிக்கும்
வகைகளையும் பின்பற்றினார்கள் .
காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.
காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும்போது பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.
அதேபோல
மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்புசத்து அதிகம் எடுத்து
கொள்ள வேண்டும். அது அரிசி சாதம், பருப்பு போன்ற உணவில் உள்ள வாதத்தை அதாவது
வாயுவை கட்டுப்படுத்தும்.
இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது,
இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்கவேண்டும் என்பது நமது
முன்னோர்களின் கட்டளை. இதை மீறும்போதுதான் சிக்கல் வருகிறது.
தொடர்ந்து
வெற்றிலை போடுபவர்களின் பற்கள் வெற்றிலை போடாதவர்களின் பற்களை விட வலிமையாகவே
இருக்கின்றன. சொத்தைப் பற்கள் அவர்களுக்கு வர வாய்ப்பு மிகமிகக் குறைவு. அவர்களுக்கு எலும்புகளும் வலிமையாகவே இருக்கும். இன்று 30
வயதிற்கு மேல் ஆனாலே எலும்புகள் வலுவிழந்து விடுகின்றன.
மூட்டு
வலி வராதவர் குறைவு. மேலும் நரைமுடி இன்று இளமையிலேயே பலருக்கும் வந்து விடுகிறது.
அதற்கு பெயரே இளநரை என்று பெயர் வைக்கப்பட்டு விட்டது.
அதற்கு
அவர்கள் தலைக்கு உப்யோகித்த சோப், ஷாம்பூ எண்ணெய், கிரீம், டை என்னும் நிறமி
மற்றும் வாழ்வியல் முறையில் தவறான கடைபிடிப்புக்கள் என பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால் வெற்றிலை போட்டு வந்தவர்களுக்கு அதிகமாக இளநரை வந்ததில்லை.
பல காலம் கருகரு முடியுடனேயே வாழ்ந்தார்கள்.
இதனால்தான் நம் முன்னோர்கள்
உணவுண்ட பின் வெற்றிலை போடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். ஆனாலும் சிலர் எப்பொழுதும், எந்நேரமும்
வெற்றிலை போட்டுக் கொண்டே இருப்பார்கள், ‘செயின் ஸ்மோக்கர்’ போல. ஒரு காலம்
வந்தது. வெற்றிலை போடுபவர்களை பட்டிக்காட்டன்களாக, கேவலமாக பார்க்க ஆரம்பித்தோம். வெற்றிலை போடுவது அருவறுப்பானதாக ஆனது.
தொடர்ந்து வெற்றிலை
போடுபவர்களுக்கு பல தீராத உயிர் கொல்லி நோய்கள் வருவதாக எச்சரிக்கைச் செய்திகள்
தொடர்ந்து பரப்பப்பட்டன.
வெற்றிலையின் இந்த மகத்துவங்கள்
சென்ற தலைமுறைக்கு மறக்கடிக்கப்பட்டது. இன்றைய தலைமுறைக்கு மறைக்கப்பட்டது
ஆனால் அதே சமயம்
வடமாநிலங்களிலிருந்து பான்பராக், குட்கா, கணேஷ், ஹான்ஸ் போன்ற புகையிலைப்பொருட்கள்
அறிமுகமானது. இன்று இவை நாடெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கின்றன.
இவற்றால் வெற்றிலையின் உபயோகம் குறைந்தது. உபயோகிப்பாளர்
இல்லாததால் விற்பனையாளர், சிறு வணிகர், பெரு வணிகர், வெற்றிலை விவசாயி என
வியாபாரச் சங்கிலி அறுந்து போனது. இவர்களது வணிகம் நொடிந்து போய் வேறு
வியாபாரங்களுக்கு மாறி விட்டது. அதாவது வணிகர்கள் வட மாநில புகையிலை பொருட்களை
விற்பனைக்கு மாறி விட்டார்கள். விவசாயிகளும் வெற்றிலை விவசாயத்தைத் துறந்து வாழை
போன்ற விவசாயத்திற்கு மாறி விட்டார்கள்.
வெற்றிலை விவசாயம் மற்ற விவசாயம் போல் இல்லாமல் மங்களகரமான விவசாயம் என விவசாயிகள் கூறுவார்கள். வெற்றிலைக்
கொடிக்கால் விவசாயம் செய்பவர்கள் செருப்பு அணியாமல்தான் உள்ளே நுழைவார்கள்.
மாதவிலக்கு உள்ள பெண்கள் வெற்றிலைக் கொடிக்கால் பக்கம் செல்ல அனுமதியில்லை. அதேபோல குழந்தை பிறந்து 40 நாட்கள்
கழித்துத்தான் வெற்றிலைக் கொடிக்காலுக்கு செல்ல அனுமதியளிப்பார்கள். அந்தளவிற்கு
மங்களரமாக செய்யக்கூடிய விவசாயம் வெற்றிலை விவசாயம்.
வெற்றிலை விவசாயத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். வெற்றிலைக்
கொடியை அகத்தி மரங்களில் பரவ விட்டு வளர்ப்பார்கள். தற்போது அகத்தி கீரைக்கும், வெற்றிலைக்கும்
வரவேற்பு இல்லை. மேலும் தண்ணீர்பற்றாக்குறை வேறு.
கொடிக்காலில் வேலை பார்த்த
கூலி ஆட்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு படையெடுத்து விட்டதால். ஆட்கள் பற்றாக்குறை,
மாறி வரும் தட்பவெப்பம் மின்சாரத் தட்டுப்பாடு, உரங்கள் விலை உயர்வு, வெற்றிலை பயிர்
நோய்கள், விற்பனை மந்தம் என பல காரணங்களால்; வெற்றிலைக் காடுகள் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது உபயோகிப்பாளர் அதிகம் இருந்தால்,தேவை அதிகரிக்கும். அதற்காக
உற்பத்தியாளர் மேலே சொல்லப்பட்ட எல்லாக் காரணிகளையும் தாண்டி அது தரும் லாபததைக்
கணக்கில் கொண்டு எப்படியும் விவசாயம் செய்ய முன் வருவார். இப்படித்தான் மற்ற பயிர்
வகைகளையும் விவசாயம் செய்து வருகிறார்கள்.
ஆனால் தேவைக் குறைவு என்பதால்
இன்றைக்கு வெற்றிலை விவசாயத்திற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலை
தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கு இந்த விவசாயமும், தொழிலும் செய்ய ஆளிருக்காது. நாமும்
வெற்றிலையை அருங்காட்சியகங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்க்க
வேண்டியிருக்கும்.
நன்மையையே செய்யும் வெற்றிலை
உபயோகிப்பதைக் குறை கூறி ஒதுக்கி விட்டு, சிகரெட், பீடி, மற்றும் வட மாநில
புகையிலைப் பொருட்களை உபயோகிக்க வைத்து அனைவரையும்
ஆரோக்கியமற்றவர்களாக வாழ வைப்பதே பன்னாட்டு நிறுவனங்களின் திட்டம்
ஆகவே நாம் அனைவரும் வெற்றிலையை உபயோகிப்போம். மற்றவர்களையும்
உபயோகிக்கத் தூண்டுவோம். அனைவரிடத்திலும் ஆரோக்கியம் பெருக்குவோம்.
இன்னும் மறக்கப்பட்ட,
மறக்கடிக்கப்பட்ட பல மரபு வழி வாழ்வியல் முறைகளை அடுத்தடுத்துப் பார்ப்போம்
************* **************** *******************


